போலி சம்பவங்களை புனைந்து துமிந்த சில்வாவை குற்றவாளியாக்கியுள்ளனர் - ஜனாதிபதி சட்டத்தரணிகள் இன்றும் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்

Friday, 18 May 2018 - 17:20

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு சட்டரீதியானது அல்லவென ஜனாதிபதி சட்டதத்ரணிகள் இன்று மீண்டும் உயர்நீதி மன்றத்தில் ஒப்புவித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது, வாதத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி சட்டதரணிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை குற்றவாளியாக்குவதற்கு விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், போலியான சம்பவங்களை புனைந்துள்ளதாக குறிப்பிட்டனர்.

துமிந்த சில்வாவை குற்றமற்றவராக்கி விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, இன்று 6வது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையின் போது, தர்க்கங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டதரணி அனுர மெத்தேகொட, துமிந்த சில்வாவை குற்றவாளியாக்கிய நீதிமன்ற தீர்ப்பு செல்லுபடி இல்லாத நிலையில், அந்த தீர்ப்பிற்கு சட்டவலு இல்லை என குறிப்பிட்டார்.

வெற்று பத்திரங்கள் சிலவற்றிற்கு வழக்கின் 3வது சந்தேகத்திற்கு உரியவரின் கையொப்பத்தை குற்றபுலனாய்வு திணைக்களத்தினர் வலுக்கட்டாயமாக பெற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி சட்டதரணி இதன்போது சுட்டிக்காட்டினார்.

சந்தேகத்திற்கு உரியவர் நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டத்தரணி இந்த விடயத்தை மேற்கோள் இட்டு காட்டினார்.

சந்தேகத்திற்கு உரியவரால் வழங்கப்பட்ட அந்த வாக்குமூலம் முழுமையான நம்பிக்கைக்கு உரியது என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டதரணி குறிப்பிட்டார்.

இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த சட்டத்தரணி, குறித்த சந்தேகத்திற்கு உரியவரிடம் இருந்து, பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய இரண்டு கைத்துப்பாக்கிகளை கைப்பற்றியதாகவும் வழக்கு விசாரணையின் போது, குற்றப்புலனாய்வுத் தரப்பினர் அந்த துப்பாக்கிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்திற்கு உரியவர் கைது செய்யப்பட்டமை, துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டமை உள்ளிட்ட அனைத்து விடயங்களும் குற்றபுலனாய்வு திணைக்களத்தினால், போலியாக புனையப்பட்ட நிகழ்வுகள் என அவர் குறிப்பிட்டார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால், இவ்வாறு புனையப்பட்ட நிகழ்வுகளால் துமிந்த சில்வா மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டதரணி குறிப்பிட்டார்.

இந்த புனையப்பட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்ட போது, உரிய முறையில் பரிசீலனைக்கு உட்படுத்த தவறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னதான மேல்முறையீட்டு விவாதத்தின் போது தர்க்கங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டதரணி அனூஜ பிரேமரட்ன, துமிந்த சில்வாவை குற்றவாளியாக்குவதற்கு புனையப்பட்ட பொய்யான ஆதாரங்கள் புறந்தள்ளப்பட்டமை மற்றும் அவற்றின் தர்க்க ரீதியான தன்மை மேல்நீதி மன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட போதும், அவை உரிய முறையில் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

குற்றபத்திரிகையில் இல்லாத காரணிகளுக்கு துமிந்த சில்வா குற்றவாளியாக மாற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி சட்டதரணி, இந்த விடயமானது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என குறிப்பிட்டார்.

துமிந்த சில்வாவை, குற்றவாளியாக மாற்றுவதற்கு புணையப்பட்ட அனைத்து சம்பவங்களுக்குமான சாட்சிகள் தர்க்க ரீதியாக முரண்பட்டுள்ளதாகவும், எந்த ஒரு சாட்சியினது வாக்குமூலத்தையும் 100 சதவீதம் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் நீதிமன்ற தீர்ப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எடுத்துரைத்துள்ளார்.

இத்தகைய நிலையில், துமிந்த சில்வாவிற்கு எந்த ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையிலும் தண்டனை வழங்குவது சட்டரீதியாக ஏற்புடையதல்லவென ஜனாதிபதி சட்டத்தரணி, ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில் தெரிவித்தார்.

ஆதாரங்கள் அல்லது வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொள்ளாமல் துமிந்த சில்வா பிரபலமான அரசியல் பிரமுகர் என்ற அடிப்படையில், நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டதரணி அனூஜ பிரேமரட்ன தெரிவித்தார்.

நீதிமன்ற தீர்ப்பை லட்சம் தடவைகள் வாசித்தாலும், துமிந்த சில்வா ஏன் குற்றவாளியாக்கப்பட்டார் என்ற கேள்விக்கு பதிலை காண முடியவில்லை என சட்டத்தரணி இதன்போது குறிப்பிட்டார்.

எனவே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை குற்றவாளியாக்கிய நீதிமன்ற தீர்ப்பு நேர்த்தியான ஒன்று அல்லவென ஜனாதிபதி சட்டதரணி அனூஜ பிரேமரட்ன, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தின் முன்னிலையில் நிறுவினார்.

இதேவேளை, கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு பெரும் குறைபாடுகளை கொண்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள், சாதாரண சந்தேகத்திற்கு அப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து ஆராயாமல் அரசு தரப்பு சட்டதரணிகளால், முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் மாத்திரம் நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிகளை பயன்படுத்தியதாக துமிந்த சில்வாவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் அது தொடர்பில் எந்த ஒரு சாட்சியும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

துமிந்த சில்வாவிற்கு துப்பாக்கி காயம் ஏற்பட்ட சம்பவம் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர தரப்பினால் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும், நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்படுகின்ற போது குறித்த விடயம், கவனத்தில் கொள்ளப்பட்டவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

மேல் நீதிமன்ற விசாரணையின் போது துமிந்த சில்வாவிற்கு முதலாவதாக துப்பாக்கி காயம் ஏற்பட்டதாக பல சாட்சியங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட போதும், அவை ஏற்புடையதல்லவென தீர்ப்பின் போது தெரிவிக்கப்பட்டமை இதற்கு சிறந்த உதாரணமாகும் என அவர் குறிப்பிட்டார்.

துமிந்த சில்வாவின் தலையின் முன்புறத்தில் துப்பாக்கி காயம் ஏற்பட்டுள்ளதாக சட்டமருத்துவ அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொய்யாக புனையப்பட்ட சம்பவங்கள் மற்றும் சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு துமிந்த சில்வாவின் தரப்பினர் சார்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படாது மேல்நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் துமிந்த சில்வாவிற்கு அனைத்து பிரஜைகளுக்கும் பின்பற்றப்படுகின்ற நடுநிலையான வழக்கு விசாரணை ஒன்று இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, சட்டத்திற்கு முரணான வகையில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பினை ரத்து செய்து அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுவிக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டதரணி அனில் சில்வா உயர்நீதி மன்றத்திடம் கோரினார்.

இந்தநிலையில், குறித்த வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.