அஞ்சல் மா அதிபரின் அதிரடி அறிவிப்பு

Monday, 18 June 2018 - 21:04

%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
விடுமுறை ரத்துச்செய்யப்பட்டுள்ளதால் நாளை சேவைக்கு சமூகமளிக்காத அனைத்து பணியாளர்களும் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவர் என அஞ்சல் மா அதிபர் ரோஹண அபேரத்ன  தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் அஞ்சல் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமை காரணமாக தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடரவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்திருந்த நிலையில் அஞ்சல் மா அதிபர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அஞ்சல் பணியாளர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து இன்று மதியம் கொழும்பில் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் நுழைய முற்பட்டனர்.

இதன்போது , தொழிற்சங்க உறுப்பினர்கள் 7 பேருக்கு ஜனாதிபதி செயலகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர் , ஜனாதிபதி உதவி செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்திருந்தார்.

இதனிடையே, அஞ்சல் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக அஞ்சல் திணைக்களத்திற்கு 125 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்தார்.

எட்டு தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக சேவையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவு, வேதனம் மற்றும் ஏனைய சேவைகள் உள்ளடங்களாக இந்த நட்டம் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அஞ்சல் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நாளொன்றுக்கு 15 கோடி ரூபாய் திணைக்களத்தில் நட்டம் ஏற்படுவதாக அஞ்சல் மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்றைய தினம் வரையில் சுமார் 50 கோடி ரூபாய் வருமானம் அஞ்சல் திணைக்களத்திற்கு கிடைக்காது போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தமது கோரிக்கைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்தார்.