சிறுத்தை கொலையை தொடர்ந்து வெடித்த சர்ச்சை..! கிளிநொச்சி நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

Friday, 22 June 2018 - 17:37

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88..%21+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தைப் புலி ஒன்று கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காணொளியை ஆராய்ந்து சம்பந்தப்பட்டோரை கைதுசெய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

குறித்த சிறுத்தைப் புலி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி வனவிலங்கு உதவி பணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – அம்பாள்குளம் பிரதேசத்தில் சிறுத்தைப் புலி ஒன்று பொதுமக்களினால் நேற்று அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இலங்கையை பாதுகாக்கும் அமைப்பு இன்று காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்தது.

நேற்றுக் காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 வரையில் வனஜீவராசிகள் அதிகாரி ஒருவர் உட்பட 10 பேரை குறித்த சிறுத்தை, தாக்கி காயப்படுத்தியது.

இதனை அடுத்து பொதுமக்கள் இணைந்து குறித்த சிறுத்தையை சுற்றிவளைத்து தாக்கி கொலை செய்தனர்.

அதேநேரம் குறித்த சிறுத்தையானது, அம்பாள்குளம் விவேகாநந்தா வித்தியாலத்துக்கு பின்னால் உள்ள காணியொன்றில் நுழைந்தமை தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஏலவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அதன் அதிகாரிகள் உரியவகையில் செயற்படவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜே.வி.பி இன்று நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தது.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைதுசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.