இந்த அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியும்

Saturday, 23 June 2018 - 15:00

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
உண்மையான அர்ப்பணிப்பும் அரசியல் உத்வேகமும் இருந்தால் கடந்த காலங்களில் செய்யத் தவறியவற்றை இந்த அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியும் என நோர்வே இராஜாங்க செயலாளரிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.                    

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வேயின் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் ஜென் ப்ரோலிச் எதிர் கட்சித் தலைவரை நாடாளுமன்றிலுள்ள அவரின் அலுவலகத்தில் நேற்று சந்தித்தார்.

இதன்போதே அவர் இதனைத் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக மக்கள் பிரதிநிதிகளான தங்கள் முன்னே எழுந்துள்ள இந்த சந்தர்ப்பத்தினை உதாசீனப்படுத்த முடியாது. 

எனவே, இந்த முயற்சிகள் தோல்வியுறும் பட்சத்தில் அது மக்களிடையே மேலும் பிரிவினையை உருவாக்கும் என சம்பந்தன் எச்சரித்துள்ளார். 

இதேவேளை, வெறுப்புணர்வுடன் செயற்படுவோர் இந்த நாட்டில் பெரும் எண்ணிக்கையில் இல்லை என்ற போதும், துரதிஷ்டவசமாக மென்போக்காளர்களைவிட அவர்களின் கருத்துக்கள் முதன்மை பெறுவதாக நோர்வே இராஜாங்க செயலாளரிடம் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனினும், மென்போக்காளர்கள் ஒன்று சேர்ந்து இயங்குகின்ற பட்சத்தில் புதிய அரசியலமைப்பானது, மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதனை உறுதிசெய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், வடக்கு கிழக்கிலுள்ள பல பிரதேசங்களில் காணிவிடுவிப்பு, காணாமல்ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினைகளுக்கு சரியான தீர்வினை எட்டுவதற்கு சர்வதேச சமூகம் காத்திரமான ஒரு நிலைப்பாட்டினை எடுக்கவேண்டும் எனவும் நோர்வே இராஜாங்க செயலாளரிடம் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.