சந்திமாலுக்கு 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை

Monday, 16 July 2018 - 17:24

%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+4+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
கிரிக்கட்டின் உன்னதத்தை பாதிக்கும் வகையில் செயற்பட்டமைக்காக, இலங்கை கிரிக்கட் அணித் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த குற்றத்துக்காக அவருக்கு இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச கிரிக்கட் பேரவை விடுத்துள்ள அறிக்கையில், 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கும் ஏலவே விதிக்கப்பட்ட 2 டெஸ்ட் தடைகளுடன், 4 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற பந்தின் தன்மையை மாற்றியமைத்த விவகாரம் மற்றும் களத்தடுப்பில் ஈடுபட மறுத்தமை போன்ற குற்றங்களால், கிரிக்கட் உன்னதத்தை பாதிக்கும் வகையில் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மூன்று பேருக்கும் 6 அபராதப் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே பந்தினை சேதப்படுத்திய குற்றத்துக்காக தினேஸ் சந்திமாலுக்கு 4 அபராதப்புள்ளிகள் வழங்கப்பட்டன.

இதன்படி தற்போது 10 அபராதப் புள்ளிகளைப் பெற்றுள்ள சந்திமால், எதிர்வரும் 24 மாதங்களில், பந்து ஓவர்களை நிறைவு செய்ய தாமதித்தல் உள்ளிட்ட ஏதேனும் குற்றங்களுக்காக மேலும் 2 அபராதப் புள்ளிகளைப் பெற்றால், மேலதிக போட்டித்தடைகளை எதிர்கொள்வார்.