நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழர் - மனைவி உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டம்

Monday, 16 July 2018 - 19:42

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
அவுஸ்திரேலியாவில் நாடுகடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள திலீபன் ஞானேஸ்வரன் என்ற இலங்கையர், விலாவுட் முகாமில் இருந்து பேர்த் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்குள்ள எமது விசேட செய்தியாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

திலீபன் ஞானேஸ்வரன் என்ற 30 வயதான இலங்கையர் ஒருவர் இன்றையதினம் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரை நாடுகடத்த வேண்டாம் என்று தெரிவித்து விலாவுட் முகாமிற்கு முன்னால் அவரது மனைவி உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பில் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சு இதுவரையில் எந்த பதிலும் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

பேர்த்தில் இருந்து மேலும் சிலருடன் இணைந்து அவர் நாடுகடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதேநேரம், தமது கணவரை நாடு கடத்தி, தம்மையும் தமது 11 மாதக் குழந்தையையும் நிரந்தரமாக பிரிக்க வேண்டாம் என்று, அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் இலங்கை திலீபனின் மனைவி கார்த்திகா கோரியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த விலாவுட் முகாமிற்கு முன்பாக, ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

அவரது மனைவிக்கும், 11 மாத குழந்தைக்கும் கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் பாதுகாப்பு வீசா வழங்கப்பட்டது.

எனினும் திலீபனை நாடுகடத்துவதற்கான உத்தரவு கடந்த வெள்ளிக்கிழமை விடுக்கப்பட்டுள்ளது.

திலீபனின் மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளது பாதுகாப்பு வீசா என்பதால், அனுசரணை வழங்கி திலீபனை மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு அழைக்க முடியாது.

அதேநேரம் அவரது மனைவி மற்றும் குழந்தையால் மீண்டும் இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையும் உள்ளது.

இந்தநிலையில் தமது குடும்பத்தாரிடம் இருந்து திலீபன் நிரந்தரமாக பிரியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார்.

திலீபனின் மனைவி கார்த்திகா ஞானேஸ்வரன், தமது கணவர் இல்லாமல் தம்மாலும், தமது குழந்தையாலும் வாழ முடியாது என்பதோடு, நாடுகடத்தப்பட்டால் இலங்கையில் தமது கணவருக்கு உயிராபத்து ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவரை நாடுகடத்துவதற்கு அவுஸ்திரேலிய, தமிழ் ஏதிலிகள் பேரவையும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அதேநேரம் அவர் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் தங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்ற போதும், 11 மாதங்களே ஆன குழந்தையின் எதிர்காலம் கருதி, அந்த குழந்தையின் உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்பட அந்த நாட்டின் சிறுவர் பாதுகாப்பு அமைப்பு முன்வர வேண்டும் என்று திலீபனின் சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.