போலி நாணய குற்றிகளை வழங்கி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் விளக்கமறியலில்...

Thursday, 13 December 2018 - 19:48

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+23+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
போலி நாணய குற்றிகளை வழங்கி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஒருவரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்துள்ளது.

அநுராதபுரத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபர், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை ஏமாற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வியாபாரி ஒருவருடன் நட்பு ரீதியான தொடர்பினை ஏற்படுத்தி, பின்னர் விடுதலைப்புலிகளால் மறைத்துவைக்கப்பட்டிருந்த நாணயக்குற்றிகள் தம்மிடம் இருப்பதாக கூறி, தங்க நாணய மாதிரிகளை காண்பித்துள்ளார்.

பின்னர், கிளிநொச்சி நகரில் வைத்து போலியான தங்க நாணயங்களை வழங்கி 23 லட்சம் ரூபாய் பணம் சந்தேகநபரால் பெறப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஏமாற்றப்பட்ட தரப்பினரால் கிளிநொச்சி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, கிளிநொச்சி காவல்துறையினர் கண்காணிப்பு கெமராக்கள் மூலமாக சாட்சியங்களை சேகரித்து, விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கண்காணிப்பு கெமரா காணொளிகள் மூலம் பெறப்பட்ட சந்தேகத்திற்கிடமான மகிழுந்தொன்றின் இலக்கத் தகட்டினை ஆதாரமாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அனுராதபுரத்தில் வைத்து சந்தேகத்திற்குரியவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் வசமிருந்து இரண்டு லட்சம் ரூபாய் பணம், போலி நாணயக் குற்றிகள், இரும்புத் துண்டுகள், மகிழுந்து என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், மோசடி செய்யப்பட்ட பணத்தைக்கொண்டு சந்தேகநபர் மேற்கொண்ட கொடுக்கல்வாங்கல்கள் குறித்தும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேலும் இருவரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.