455 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம்

Thursday, 17 January 2019 - 19:50

455+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
இலங்கையில் மூன்று முக்கிய திட்டங்களுக்காக 455 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தகஹிகோ நாகாஹோ (Takehiko Nakao) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இணக்கம் தெரிவித்துள்ளார்.
 
பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இன்று முற்பகல் பிலிப்பைன்ஸ் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
 
இதன்போது அதன் தலைவர் தகஹிகோ நாகாஹோவை சந்தித்தார்.
 
இந்த சந்திப்பின் போது ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இதற்கான இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
 
இதன் ஒரு கட்டமாக 300 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கான தூண்களைக்கொண்ட நெடுஞ்சாலை நிர்மாண திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
 
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய உப பிராந்தியத்திற்கான பொருளாதார உதவி வழங்கும் கொள்கை சட்டத்தின் படி இந்த இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதுதவிர, விஞ்ஞான, தொழிநுட்ப, மனித வள அபிவிருத்தி திட்டத்திற்காகவும் இலங்கைக்கு 145 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
 
நகர அபிவிருத்தி திட்டங்களுக்கான சாத்திய வள ஆய்வுகளுக்கான தொழிநுட்ப உதவி வழங்கும் முன்மொழிவு முறைமைக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த இணக்கப்பாடுகளுக்கான உடன்படிக்கைகளில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தகஹிகோ நாகாஹோ ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந்த சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, இலங்கை தற்போது வறுமையை ஒழித்தல், போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தல் என்ற முக்கியமான இரண்டு சவால்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக தெரிவித்தார். 
 
அதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
 
நாட்டுக்குள் சட்டவிரோத போதைப்பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கு சுங்கத்துறைக்கு தேவையான தொழிநுட்ப மற்றும் நிபுணத்துவ அறிவை வழங்குவதற்கான வழிவகைகள் குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
 
இலங்கை இன்று வரட்சி மற்றும் வெள்ளம் ஆகிய இரண்டு வகையான பாதிப்புகளுக்கு உட்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவற்றுக்கு முகங்கொடுப்பதற்காக முறையானதொரு நிகழ்ச்சித் திட்டம் அவசியம் என்றும் தெரிவித்தார். 
 
அந்த வகையில் காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கான உதவியை வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இணக்கம் தெரிவித்தார்.