மாகந்துரே மதூஷின் மற்றுமொரு உதவியாளர் கைது

Tuesday, 19 February 2019 - 15:22

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
பன்னிப்பிட்டியில் 700 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கற்கள் மற்றும் வைரங்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷுடன் நெருங்கிய தொடர்புடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெடிகந்தே கசுன் என அறியப்படும் கசுன் தனஞ்ஜய என்ற 31 வயதுடைய அவர் கிரிபத்கொடை - வெடிகந்த பகுதியில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான விசேட குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று காலை இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 5ஆம் திகதி காவல்துறை உத்தியோகபூர்வ ஆடை மற்றும் சிவில் ஆடையுடன் சென்றவர்கள் பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்த 700 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கற்கள் மற்றும் வைரங்கள் என்பன கொள்ளையிடப்பட்டிருந்தன.

500 கோடி ரூபா மதிப்பிலான வைரங்களும், 200 கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களுமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டிருந்தன.

குறித்த கொள்ளைச் சம்பவம் டுபாயில் கைதுசெய்யப்பட்டு பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷினால் வழிநடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றபோது அந்தப் பொருட்களை கொள்வனவு செய்யவிருந்த வெளிநாட்டவர், கைவிலங்கிடப்பட்டு, கடத்தப்பட்ட நிலையில், மஹரகம பகுதியில் கைவிட்டுச் செல்லப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில், இதற்கு முன்னதாக துஷித மதுரங்க என அறியப்படும் மாத்தற மல்லி என்பவர் உள்ளிட்ட இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கசுன் தனஞ்ஜய என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர், நாளைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படுவதற்காக நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

இதேவேளை, தற்போது டுபாயில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷுக்கு உரித்துடையதாகக் கூறப்படும் அனைத்து வங்கிக் கணக்குகளையும் ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, டுபாயிலும், இலங்கையிலும் உள்ள 23இற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வங்கிக் கணக்குகளுக்கு மேலதிகமாக, மதூஷுக்கு உரித்துடையதாக கூறப்படும் சொத்துகள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.