கபில ப்ரியதர்ஷனவின் மரணம் கொலையா? தற்கொலையா?

Friday, 22 March 2019 - 19:32

%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%3F+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%3F
பெலியத்தை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கபில ப்ரியதர்ஷன அமரகோனின் மரணம் கொலை அல்ல தற்கொலை என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெலியத்த பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர் கபில பிரியதர்ஷன அமரகோன் இன்று காலை உயிரிழந்தார்.

கராப்பிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை மரணித்திதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை பல்லத்தர - மொரதவான பகுதியில் உள்ள தமது வீட்டில் வைத்து அவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.

இதனையடுத்து அவர் தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.

இந்த நிலையில், குறித்த மரணம் தொடர்பில் எமது செய்திச் சேவை வினவியபோது கருத்து தெரிவித்துள்ள கராப்பிட்டிய மருத்துவமனை பணிப்பாளரான மருத்துவர் ப்ரியந்த கருணாரத்ன, அதிக இரத்த வெளியேற்றமே இந்த மரணத்திற்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட எவரையும், வீட்டிலிருந்தவர்கள் அறிந்திருக்கவில்லை என்றும், சம்பவம் இடம்பெற்றபோது அவர் தங்கியிருந்த அறையின் கதவு மற்றும் ஜன்னல்கள் என்பன மூடப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், மரணித்தவரின் கட்டில் மெத்தைக்கு கீழே இருந்து துப்பாக்கி ஒன்றும், 4 தோட்டாக்களும் பின்னர் மீட்கப்பட்டுள்ளன.

இதேநேரம், குறித்த வீட்டின் 21 வயதுடைய பெண் பணியாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, நாட்டுத் துப்பாக்கி ஒன்று வீட்டின் அருகில் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த துப்பாக்கி ஊடாக பெலியத்தை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர் தன்னைத் தானே சுட்டுக்கொள்வதற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நாட்டுத் துப்பாக்கியையும், அவரின் அறையிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டக்கள் என்பன தொடர்பில் அரச இரசாயண பகுப்பாய்வக அறிக்கையை பெற்றுக்கொள்ள உள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குடும்ப முரண்பாடு ஒன்றினால் நீதிமன்றில் உள்ள வழக்கு ஒன்றின் காரணமாக பெலியத்தை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர், கலக்கம் அடைந்திருந்தார் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.