யாழை முடக்கிய எழுக தமிழ் பேரணி..

Monday, 16 September 2019 - 19:18

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF..+
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் இன்று யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்காரணமாக யாழ்ப்பாண நகரம் மற்றும் சில பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன் போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெறவில்லை என எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைவராக கொண்ட, தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இந்த எழுக தமிழ் பேரணி நடைபெற்றது.

இன்றைய எழுகத் தமிழ் பேரணிக்கு 60க்கும் மேற்பட்ட சிவில் சமுக அமைப்புகள் ஆதரவைத் தெரிவித்திருந்ததுடன், ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த பேரணியில் கலந்துக் கொண்டிருந்தனர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்தும், நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்தும் இரண்டு பேரணிகள் காலை 9 மணி அளவில் ஆரம்பமாகின.

அதன்பின்னர் குறித்த பேரணிகள் பிற்பகல் வேளையில் யாழ்ப்பாணம் முற்றவெளித் திடலை வந்தடைந்ததுடன் அங்கு எழுக தமிழ் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது வடக்கு கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல், சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பக்கசார்பற்ற சர்வதேச விசாரணை நடத்தப்படுவது உள்ளிட்ட ஆறு கோரிக்கைகள் அடங்கிய பிரகடனம் நிறைவேற்றப்பட்;டது.

இதன்போது அங்கு உரையாற்றிய பேரவையின் இணைத்தலைவரும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ. விக்னேஸ்வரன், இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா இதுவரை கடைப்பிடித்த மென்போக்கு நிலை தளர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதேவேளை, இன்றைய தினம் இடம் பெற்ற எழுக தமிழ் பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் பங்கேற்றமை குறிப்பிடதக்கது.