Monday, 02 December 2019 - 21:24
ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த பாக்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர்..
வெகுவிரைவில் தமது நாட்டுக்கு அரச முறை பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் சாட் மஹ்மூத் குரேஷி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இன்று ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தி முன்னோக்கிக் கொண்டு செல்ல தமது நாடு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையுடன் நெருங்கிய நட்புறவை பேணிவரும் தமது நாடு, பொருளாதார அபிவிருத்தி, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான விடயங்களில் இலங்கையுடனான தொடர்பினை வலுவாக முன்னெடுத்துச் செல்ல ஆர்வம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
தமது நாட்டில் உள்ள பௌத்த பாரம்பரியத்துடன் தொடர்புடைய மரபுரிமைகளை பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்ட, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார உதவிகளுக்கு அப்பாற்பட்டு இரு நாடுகளும் பரஸ்பர நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்
போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல் ஆகியன தற்போது நாடு எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை கட்டுப்படுத்துவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.