Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+16+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81..%21
Wednesday, 25 March 2020 - 19:29
நாளை 16 மாவட்டங்களுக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு..!
19,893

Views
வட மாகாணத்தையும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களையும் ஆகியவற்றைத் தவிர, நாட்டின் ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும்.

இந்தகாலப்பகுதியில் சுகாதாரத்துறையினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கண்டிப்பாக மக்களும், விற்பனை நிலையங்களும் கடைபிடிக்க வேண்டும் என்று காவற்துறை பிரதி மா அதிபர் அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.

விசேட உத்தரவுகளுக்கு அமைய, நாடு முழுவதும் 600 வரையான வீதித்தடைகளை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு இடையிலான மக்கள் போக்குவரத்தை தடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக அபாயகர பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பயணிக்க முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளிலும் அத்தியாவசிய மற்றும் அனுமதிக்கப்பட்ட சேவைகளுக்காக மாத்திரமே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர அனுமதிக்கப்படும்.

அதன்போது சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியை பொதுமக்கள் சந்தைக்கு அல்லது அங்காடிகளுக்கு சென்று திரும்ப மாத்திரமே பயன்படுத்த வேண்டும் எனவும், காவற்துறை பிரதி மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிலசந்தர்ப்பங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படக்கூடும்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்களின் பாதுகாப்பின் பொருட்டே மேற்கொள்ளப்படுகிறது என்பதை மக்கள் புரிந்து, அறிவுறுத்தல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி நடந்துக் கொள்ள வேண்டும் எனவும் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன கேட்டுக் கொண்டார்.

அதேவேளை, ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் கூட, இந்த நோய் அறிகுறிகள் உள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் செல்ல முடியாது.

இதற்கிடையில், ஊரடங்கு சட்டம் கடந்தமுறை தளர்த்தப்பட்ட போது, அங்காடிகளுக்கு வெளியில் ஒழுக்கமாக சிலர் நடந்துக் கொண்டாலும், அங்காடிகளுக்குள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நடந்துக் கொள்ளாத நிலைமை அவதானிக்கப்பட்டது

எனவே மக்கள் சுகாதார அறிவுறுத்;தல்களை சரியாக பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா நோய் தொடர்பான போலியான செய்திகளை பேஸ்புக்கில் பதிவு செய்த தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் நிர்வாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் மாலபே பகுதியில் வைத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக, பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அவர் நீதிமன்றில்முன்னிலைப்படுத்தப்பட்டதற்கு அமைய, அவரை எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர், இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 10 பேர் மரணித்துவிட்டதாக பேஸ்புக் மூலம் போலியான செய்தியை பதிவிட்டிருந்ததாக, காவற்துறை பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அவசரநிலைமைகளின் போது பொதுமக்கள் அழைக்க வேண்டிய 3 தொலைபேசி இலக்கங்களை காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

கொவிட்-19 பரவலை தடுக்கும் பொருட்டு, நாடெங்கிலும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் அதிக ஆபத்துமிக்க பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் பொதுமக்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகள் மற்றும் அவசர தேவைகள் குறித்து 119, 0112444480 மற்றும் 0112444481 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும்.

அவசரமாக மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டாலோ, அல்லது மின்சார தடை, நீர் விநியோகத்தடை போன்றன ஏற்பட்டாலோ, வைத்தியசாலைக்கு செல்ல வேண்டுமாக இருந்தாலோ, மேற்சொன்ன இலக்கங்களுக்கு அழைக்க முடியும் என்று பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


இதேவேளை, ஊரடங்கு உத்தரவை மீறுகின்றவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என்று காவற்துறை ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதற்காகவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனை மக்கள் தெளிவாக புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும்.

கடந்த 24 மணி நேரத்தில் 420 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 2 ஆயிரத்து 682 பேர் இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 706 வாகனங்கள் காவற்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தடுப்பு காலப்பகுதியில் பொதுமக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தவைரஸ் மிகவும் அபாயகரமானது என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

குறிப்பாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் வெளியிடங்களுக்கு செல்லும் போது, சுயஒழுக்கத்துடன் நடந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதிகளிலும் வீட்டுக்குள்ளேயே இருப்பதே சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top