எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ள விடயம்

Tuesday, 23 January 2018 - 19:23

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
அரசாங்கத்தின் மந்தகதியிலான செயற்பாடுகள், தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கடும்போக்காளர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல உந்து சக்தியாக அமைவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான அரசியல் பிரிவுத் தலைவருடன் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டிய ஒன்று என்றும், இலங்கை அரசாங்கமானது சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்று என்பதையும் சம்பந்தன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.

இது தொடர்பில் மேலும் இழுத்தடிப்புக்கள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்கள் தமது சொந்தக் காணிகளையே விடுவிக்குமாறு போராட்டங்களில் ஈடுபடுகின்றார்கள்.

அவர்களின் நியாயமான கோரிக்கையைப் புறந்தள்ளமுடியாது.

இதனைக் காலந்தாழ்த்துவது மக்கள் மனதில் விரக்தியையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாகவும், சம்பந்தன் கூறியுள்ளார்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமானது தமது செயற்பாடுகளை விரைவாக ஆரம்பித்து நியாயமான விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை நிலையினை வெளிக்காட்ட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமானது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் திருப்தியடையும் வகையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், உறவினர்கள் மனதில் ஆறுதலைக் கொண்டுவரும் வகையில் செயற்படவேண்டும் எனவும் ஐரோப்பிய பிரதிநிதியிடம் சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.

இதேவேளை, உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் முடிவடைந்தததையடுத்து, புதிய அரசியலமைப்பு வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உருவாக்கப்படுகின்ற புதிய அரசியலமைப்பானது நியாயமானதும் நிரந்தரமானதும் தமிழ்மக்களுக்குத் திருப்தியளிக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கவேண்டும்.

எனவே, இந்த விடயங்களை உறுதிசெய்வதற்கு சர்வதேச சமூகம் தனது தொடர்ச்சியான பயனுறுதிமிக்க ஈடுபாட்டினை இலங்கை அரசாங்கத்துடன் கொண்டிருக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியிடம் சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips