இன்றும் ரணகளமான நாடாளுமன்றம்!! நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதாக சபாநாயகர் அறிவிப்பு

Friday, 16 November 2018 - 19:09

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%21%21+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பிரதமருக்கு எதிராக இன்று சபைப்படுத்தப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை, நிறைவேற்றப்பட்டது எனத் தாம் ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தைக் கைப்பற்றி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக, சபாநாயகர் காவல்துறையினர் பாதுகாப்புடன் சபைக்குள் பிரவேசித்தார்.

இதற்கு முன்னதாக சபாநாயகர் தலைமையில், கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

எனினும், குறித்த கலந்துரையாடலில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை எனத் தெரிவித்து சபை முதல்வர் தினேஸ் குணவர்தன வெளியேறினார்.

இதேநேரம், நேற்றைய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை கொண்டுவர இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இதற்கமைய, ஜனாதிபதி அறிவித்ததைப்போன்று, அவநம்பிக்கை பிரேரணையின் முதலாவது பிரிவு நீக்கப்பட்டு, மீண்டும் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகிய போது, அதனை சபையில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

பிற்பகல் 1.30 அளவில், நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில், சபை அமர்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பிருந்தே அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்துக்கு அருகில் நின்று எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பாலித தெவரப்பெரும் கூரிய ஆயுதங்களை சபைக்குள் கொண்டுவந்தாகவும், அந்தக் குற்றத்திற்காக அவர்களைக் கைது செய்யுமாறும் வலியுறுத்தி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ, சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்ததுடன், அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

அமைச்சர்களான விமல் வீரவங்ச, பவித்ரா வன்னியாராச்சி, பந்துல குணவர்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் சபாநாயகரின் ஆசனத்திற்கு அருகில் நின்றவாறு சபையில் உள்ளவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறினர்.

இந்த நிலையில், பிற்பகல் 2.15 அளவில் காவல்துறை குழுவொன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்நுழையும் நுழைவாயிலின் ஊடாக சபைக்குகள் பிரவேசித்தனர்.

இதனையடுத்து, அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறையினர் மீது பொருட்களை வீசி எரிந்து எதிர்ப்பினை வெளியிட்டதுடன், மேலும் சிலர் சபாநாயகரின் ஆசனத்தை வேறு ஒரு இடத்திற்கு தூக்கிச் சென்றனர்.

இதையடுத்து, நாடாளுமன்ற நிர்வாகத்தினர் பிறிதொரு இடத்தில் ஆசனம் ஒன்றை ஒதுக்கி, சபாநாயகர் சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

எனினும், அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அந்த ஆசனத்தை பறித்த அதனைக் கொண்டு, காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.

அத்துடன், மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர், காவல்துறையினர் மீது மிளாகாய்ப்பொடியை வீசி தாக்குதல் நடத்தினார்.

இதனையடுத்து, காவல்துறையினர் மற்றும் நாடாளுமன்ற பணிக்குழுவினரின் பாதுகாப்புக்கு மத்தியில் இருந்தவாறே சாபாநாயகர் ஒலிவாங்கியின் ஊடாக சபையில் கருத்து வெளியிட்டார்.

இதன்போது, நிலையியல் கட்டளைகளுக்கு அப்பால், எதிர்க்கட்சியினர் முன்வைத்த அவநம்பிக்கை பிரேரணை மீது வாக்கெடுப்பை நடத்துவதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதன்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைகளை உயர்த்தி தமது வாக்குகளைப் பதிவு செய்ததையடுத்து, அதனை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதையடுத்து, நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 19ம் திகதி பிற்பகல் 1.00 மணிவரையில் ஒத்திவைப்பதாகவும் அறிவித்த சபாநாயகர், காவல்துறை பாதுகாப்புடன் சபையிலிருந்து வெளியேறினார்.

அதன் பின்னர், அரசாங்கத் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்றன.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் மீது மிளகாய்ப்பொடி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தின் நெற்றியில் காயம் ஏற்பட்டதுடன், மோதலை கட்டுப்படுத்த முயற்சித்த 7 காவல்துறையினர் காயமடைந்ததாக நாடாளுமன்ற காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips