Hirunews Logo
+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Monday, 21 January 2019 - 13:25
அரசியல் யாப்பு நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக டெலோ அறிவிப்பு
66

Views
தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியல் யாப்பு நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் ந. ஸ்ரீகாந்தா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் பின்னணியில், முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை கவனமாகவும் நிதானமாகவும் ஆராய்கின்றபோது, அதனை நிராகரிப்பதைத் தவிர வேறுதெரிவுகள் எதுவும் தமக்கு இல்லை என்பதை தாங்கள் திட்ட வட்டமாக தெரிவிக்க வேண்டியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ஒரே நாடு என்ற வரையறைக்குள் நீதியானதும், நிலைத்து நிற்கக் கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றினை, ஜனநாயக வழிமுறைகளுக்கு ஊடாக ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதில் தாம் இப்பொழுதும் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் தீர்வென்பது, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பூரண சுயாட்சி உரிமை கொண்ட அரசியல் நிர்வாக ஏற்பாட்டினை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதிலும்,

ஒற்றையாட்சி முறைக்குப் பதிலாக, சமஷ்டி ஆட்சி முறை என்று அழைக்கப்படும் இணைப்பாட்சி முறையில் அமைய வேண்டும் என்பதிலும் தாங்கள் உறுதியாக இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிபுணர் குழுவின் அறிக்கையின் பிரகாரம் ஒற்றையாட்சி முறை தொடர்ந்து நீடிப்பதற்கு மிகச் சாதுரியமாக பிரேரிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன், பௌத்த மதத்திற்கு நடைமுறையில் உள்ள அரசியல் சாசனத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அரச மதம் என்னும் சட்ட அந்தஸ்த்து தொடர்ந்து பாதுகாக்கப்படுவதற்கும் வழி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகார பங்கீடு விடயத்தில், அதனை விஸ்தரித்து, வலுப்படுத்தி முழுமைப்படுத்துவதற்கு பதிலாக, அரை குறையான அதிகாரங்களை மாத்திரமே மாகாணசபைகளுக்கு வழங்கியிருக்கும் பதின் மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் ஆக்கபூர்வமாக எந்தவொரு முன்னேற்றகரமான யோசனையும் முன்வைக்கப்படவில்லை.

அதேவேளை, அரச காணிகள் விடயத்தில், நிலப்பங்கீடுகள் வழங்குவதில் பாரிய குடியேற்றங்களுக்கு அடிகோலியுள்ள மகாவலி அபிவிருத்தித் திட்டம் உட்பட, இப்போது செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இப்போதைய நடைமுறைகளே தொடர்ந்தும் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழினத்தின் தாயகம் திட்டமிட்ட குடியேற்றங்களால் தொடர்ந்து சூறையாடப்படுவதை இது உறுதிப்படுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சட்ட மன்றத்தின் இரண்டாவது சபைக்காக பிரேரிக்கப்பட்டிருக்கும் யோசனையின்படி, மாகாணசபைகள் மூலம் பிரதிநிதிகள் அந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பதிலாக, மாகாணசபை உறுப்பினர்கள் மத்தியில் இருந்தே அந்த தெரிவு இடம் பெறுவது என்பது, மாகாண சபைகளின் சுயாதீனத்தை கேள்விக்குரியதாக மாற்றுவதோடு, ஒற்றையாட்சி முறைக்கு வலுவூட்டுவதாகவே அமையும்.

இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்கள் அவையை மாதிரியாகக் கொண்டு, இந்த யோசனை தயாரிக்கப்படாதமையானது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றே கருதவேண்டியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, அருகில் அமைந்திருக்கும் இரண்டு அல்லது மூன்று மாகாணங்களின் இணைப்புப் பற்றிய பிரேரணையானது, தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான இணைந்த வடகிழக்கு மாநிலம் என்பது வெறும் அரசியல் கனவாகவே நீடிக்கக் கூடியவிதத்தில், அமைந்திருப்பதாக டெலோ அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட இணைப்பு மாகாணங்களில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளமையானது, குடியேற்றங்களால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாணத்தை வடக்கிலிருந்து தொடர்ந்து தனிமைப்படுத்தி வைப்பதற்கு ஏதுவாக முன்வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுருக்கமாகச் சொல்வதானால், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை தொடர்ந்து நிராகரித்து,

பெரும்பான்மையினரின் அரசியல் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் விதத்தில், இந்தத் தீர்வுத் திட்ட அறிக்கை அமைந்துள்ளது என்பதனை தாங்கள் திட்ட வட்டமாகவும் தெட்டத் தெளிவாகவும் தெரிவிக்கத் தவறினால் தமது மக்களுக்கு துரோகம் செய்தவர்களாகி விடுவார்கள் என டெலோ அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
10,160 Views
27,709 Views
1,285 Views
15,828 Views
185 Views
62,651 Views
Top