மரண தண்டனை தீர்மானத்தில் மாற்றம் இல்லை – ஜனாதிபதி

Monday, 21 January 2019 - 18:59

%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E2%80%93+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடந்த நான்கு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் இந்த வாரம் முதல் புதிய உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்திலிருந்து தாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்பான திட்டமிடப்பட்ட குற்றங்கள் பற்றிய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான கட்டணமற்ற அவசர தொலைபேசி இலக்கமொன்றும் ஜனாதிபதியினால் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

அதற்கமைய 1984 என்ற இலக்கத்தின் ஊடாக இந்த தகவல்களை வழங்க முடியும்.

இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோளுக்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அதற்காக வழங்கக்கூடிய தொழிநுட்ப ஆலோசனைகள் தொடர்பில் கண்டறிவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் நிபுணர் குழுவொன்று வெகுவிரைவில் இலங்கை வருகை தரவுள்ளதாக தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனை காரணமாக பின்னடைவை சந்தித்திருந்த பிலிப்பைன்ஸ் நாடு, அந்தநாட்டு ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் காரணமாக இன்று அந்த சவாலினை வெற்றிகொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களை தாம் நடைமுறைப்படுத்தாவிடினும் சில அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அஞ்சி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மேற்கொண்ட தீர்மானங்களிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான தயா கமகே, ரிஷாட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips