Monday, 21 January 2019 - 21:37
சிரிய பிரச்சினையை தீர்க்க இணக்கம்
சிரிய பிரச்சனையினை தீர்ப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் ஆகியோருக்கு இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.
இரு தலைவர்களும் தொலைபேசியின் ஊடாக பேச்சுவார்த்தை நடத்திய போது இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக சிரியாவின் வட கிழக்கு பிராந்தியத்தில் செயல்பட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை அமெரிக்க துருப்பினர் தோற்கடித்து விட்டதாக அமெரிக்கா அறிவித்து அங்கிருந்து துருப்பினரை கட்டம் கட்டமாக தாயகத்திற்கு அழைக்கும் பணிகள் ஆரம்பமாகின.
இதனையடுத்து வடக்கு சிரியாவில் அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்படும் குர்திஷ் ஆயுததாரிகள் மீது தாக்குதலை நடத்தப் போவதாக துருக்கி அறிவித்திருந்தது.
இந்த தாக்குதலை துருக்கி மேற்கொள்ளும் பட்சத்தில் அமெரிக்கா மற்றும் துருக்கிக்கிடையே தாக்குதல் இடம்பெறலாம் என ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, சிரியாவில் குர்திஷ் படைத்தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள மன்பிஜ் நகரம் தொடர்பாக அமெரிக்க மற்றும் துருக்கிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை நீக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.