கிழக்கு மாகாணத்தில் நிர்வாக முடக்கல் போராட்டம் (படங்கள்)

Tuesday, 19 March 2019 - 12:44

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வேண்டியும், ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட கூடாதென வலியுறுத்தியும் இன்று கிழக்கு மாகாணத்தில் நிர்வாக முடக்கல் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் இந்த போராட்டத்திற்கு பல தரப்பினர் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

இதன் காரணமாக பல பிரதேசங்களில் பாடசாலை மாணவர்களின் வருகை குறைவடைந்து காணப்பட்டதுடன், பொது போக்குவரத்துக்களும் வழமைப்போல் இயங்கவில்லை என எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பொது இடங்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் நிர்வாக முடக்கல் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன், திருகோணமலையில் தமிழ் பிரதேசங்களில் நிர்வாக முடக்கல் போராட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.



அத்துடன் திருகோணமலையின் சட்டத்தரணிகளும் இந்த போராட்டத்துக்கு ஒத்துழைக்கும் வகையில், வழக்குகளில் முன்னிலையாவதை தவிர்த்திருந்தனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகம் என்பனவும் இந்த போராட்டத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தி இருந்தன.

இதேவேளை, தமது கோரிக்கைகளை முன்வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் இன்று மட்டக்களப்பில் கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு பேரணியில் பொது மக்கள், பொது அமைப்புக்கள், இளைஞர்கள், யுவதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், மட்டக்களப்பு தமிழ் இளைஞர்கள் சமூக அமைப்பு உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்ட பேரணி, காந்தி பூங்கா வரையில் சென்றது.

காந்தி பூங்காவினை பேரணி சென்றடைந்ததும் அங்கு கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையில் தமது பிரச்சினையை உள்ளூர் பொறிமுறையில் தீர்க்கப்போவதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பதானது தமக்கு பெரும் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.

தமக்கான நீதியை இந்த அரசாங்கம் வழங்கும் என்ற நம்பிக்கை தங்களிடம் தற்போது சிறிதும் இல்லை எனவும், தமக்கான தீர்வினை சர்வதேசம் தலையீடு செய்வதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகளிகளிலும் இன்றைய தினம் நிர்வாக முடக்கல் மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் வடக்கில் இன்றைய தினம் பூரண நிர்வாக முடக்கல் மேற்கொள்ளப்பட வில்லை எனவும் செய்தி தொடர்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips