கட்டுவென சம்பவத்தின் சந்தேக ஆள் சரண்
2012 ஜூன் மாதம் 19 செவ்வாய்க் கிழமை- பி.ப 08:05
ஹம்பாந்தொட்டை கட்டுவெனவில் இடம்பெற்ற ஜே வி பியின் கூட்டத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஜுலாம்பிட்டிய அமரே இன்று தங்காலை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
எனினும் அவர் இந்த சம்பவத்திற்காக அன்றி, பிரிதொரு வழக்கின் பொருட்டு சரணடைந்துள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவிராந்தின் அடிப்படையில் அவர் சரணடைந்திருப்பதாக காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சரணடைந்த அவரை நாளை வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை வலஸ்முல்லை – கட்டுவெனவில் இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பத்துக்கு சிறிலங்கா சுதந்திர கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கட்சியின் பொருளாளர் அமைச்சர் டளஸ்அலகப்பெரும விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சம்பத்தை கண்டிப்பதுடன், அதனுடன் தொடர்புடையவரை கைது செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது நீதிமன்றில் சரணைடைந்துள்ள ஜுலாம்பிட்டிய அமரேவுக்கும், கட்டுவென தாக்குதல் சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பதாக, ஜே வி பி தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.
கட்டுவென துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில்; இரண்டு பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
