பிரதேசசபை தலைவர்களுக்கு ஆணையாளர் பணிப்பு
2012 ஜூலை மாதம் 21 சனிக் கிழமை- பி.ப 01:30
வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தலின் பொருட்டு வேட்பாளர்களாக போட்டியிடும் பிரதேச சபை தலைவர்களுக்கு, தேர்தல் காலத்தில் தமது பதவியில் இருந்து விடுமுறை பெற்றுக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல்கள் சட்டத்தின் படி மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் பொருட்டு அவர்களுக்கு தாம் வகிக்கும் பதவியில் இருந்து விலக தேவையில்லை.
இதன் காரணமாக பல்வேறு சந்தர்ப்பங்களில், அவர்கள் தமது தேர்தல் நடவடிக்கையின் பொருட்டு அரச சொத்துக்கள், வாகனம் மற்றும் சேவையாளர்களை பயன்படுத்திக்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.
இவற்றை விசாரணை செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல்கள் திருத்த சட்டத்தில் இடமில்லை.
இந்த நிலையில் இவ்வாறான சூழ்நிலைகளை தவிர்க்கும் நோக்கிலேயே, தமது பதவிகளில் இருந்து விடுமுறை பெற்றுக்கொண்டு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுமாறு தேர்தல்கள் ஆணையாளர் பிரதேச சபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செப்டம்பர் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலின் பொருட்டு பிரதேச சபை தலைவர்கள் பலர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த முறை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளது செயலாளர்களுக்கும் தேர்தல்களை ஆணையாளர்களுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது சில கட்சியின் பிரதிநிதிகள் மட்டக்களப்பு, அநுராதபுர மாவட்டங்களின் தற்போதைய நிலமைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு தெளிவுப்படுத்தினர்.
இது தொடர்பில் அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு கட்சியின் செயலாளர்களுக்கு ஆணையாளர் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன் இது தொடர்பில் தாமும் ஆராய்ந்து, அது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
