டெசோ - இலங்கை தமிழர்களுக்கு நெருக்கடி
2012 ஜூலை மாதம் 21 சனிக் கிழமை- பி.ப 08:21
தனித் தமிழீழ கொள்கையை முன்வைத்து டெசோ மாநாடு நடத்தப்பட்டால் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் அநாவசிய நெருக்கடி நிலையேற்படும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் எம்.யுவராஜா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய ஈரோடு பிரதேசத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையில் இடம்பபெற்ற மோதல் காரணமாக பெருமளவிலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இலங்கையில் போருக்குப் பின்னர் பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர்.
இந்த தருணத்தில் டெசோ மாநாடு நடத்துவது பழைய பிரச்சினைகளைத் மீளத் தூண்டுதலுக்கு உள்ளாக்குவது போன்று அமையும் எனவும், தமிழ் மக்களுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் எம்.யுவராஜா சுட்டிக்காட்டியுள்ளார்..
இலங்கைப் பிரச்சினையில் டெசோ மாநாடு தற்போது குழப்பம் விளைவிக்கும்.
இந்த நெருக்கடியில் காங்கிரசைப் பொறுத்தவரை தமிழ் ஈழ மக்களின் பாதுகாப்பு, வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள், தமிழக மக்களின் உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன.
இதன்முடிவு ஈழ மக்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். மத்திய அரசு எப்போதுமே இலங்கைத் தமிழர் நலனில் உறுதியாக உள்ளது.
போருக்குப் பின் அங்கு மறுவாழ்வுப் பணிக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
