வெள்ளவத்தை முக்கொலை சந்தேகநபர் தேடப்படுகிறார்
2012 ஆகஸ்ட் மாதம் 20 திங்கட் கிழமை- பி.ப 07:17
வெள்ளவத்தை ராமகிருஷ்ண டெரஸ் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினரின் மரணம் தொடர்பிலான காணாமல் போயுள்ள பிரதான சந்தேக நபர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
சந்தேகத்திற்குரியவர் தலைமறைவாகியுள்ள நிலையில், குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் இந்த உத்தரவை விதித்துள்ளது.
இதேவேளை, சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 27ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி ராமகிருஷ்ணா டெரஸ் வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து தாய், தந்தை, மகள் ஆகிய மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
இதன் போது அவர்களது மூத்த மகன் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, மீட்கப்பட்ட சடலங்களின் பாகங்கள் அரச ரசாயண பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுப்பாய்வு அறிக்கைக்கு அமைய, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை பேச்சாளரின் காரியாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மரணமான மூவர் தொடர்பான மரணவிசாரணைகள் இன்று கொழும்பு பிரேத பரிசோதனை நிலையத்தில் பிரதான சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர உள்ளிட்ட நிபுணவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதனையடுத்து குறித்த சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
