லோக்பால் குறித்து ஹசாரே மீண்டும் கேள்வி
2012 ஆகஸ்ட் மாதம் 21 செவ்வாய்க் கிழமை- பி.ப 01:59
அணுசக்தி ஒப்பந்தம், ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றிற்கெல்லாம் கூட்டணியில் அல்லாத சில எதிர்க்கட்சியினரின் ஆதரவை பெற்ற பிரதமர் மன்மோகன்சிங், லோக்பால் பிரேரணை கொண்டுவரும் விஷயத்தில் மட்டும் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்தை பெறமுடியாதது ஏன் என அன்னா ஹசாரே கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே தனது வலைப்பூவில் தற்போதைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நினைத்தால் நிச்சயம் லோக்பால் மசோதாவை கொண்டுவர முடியும்.
இதற்காக கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த பிரதமர் மன்மோகன்சிங்கினால் முடியும் என்றும் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று பிரதமர் உரையாற்றும் போது, லோக்பால் மசோதாவை கொண்டுவருவதில் பிற கட்சிகளின் ஒருமித்த கருத்தை பெறுவதில் சிரமமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
