இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கை தொழில் வழங்குனர் சம்மேளனம்

Thursday, 13 December 2018 - 6:38

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக எதிர்வரும் 16 ஆம் திகதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு இலங்கை தொழில் வழங்குனர் சம்மேளனம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தொழிற்சங்கங்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இலங்கை தொழில்வழங்குனர் சம்மேளனத்தின் உடாக குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை தொழில் வழங்குனர் சம்மேளனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கனிஸ்க வீரசிங்கவின் கையெழுத்துடன், தொழிற்சங்கங்களுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 16 ஆம் திகதி முற்பகல் 10.30க்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு இலங்கை தொழில் வழங்குனர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை வேதனைத்தை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் பெருந்தோட்டங்களில் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆயிரம் ரூபா என்ற அடிப்படை வேதன இலக்கை அடையும்வரை போராட்டம் தொடரும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், 600 ரூபாவுக்கு மேல் அடிப்படை வேதனத்தை அதிகரிக்க முடியாது என முதலாளிமார் சம்மேளனம் தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் போராட்டம் கைவிடப்படுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான அறிவித்திருந்தார்.

ஜனாதிபதியுடன் நேற்று முன்தினம் இரவு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், அவரின் வேண்டுகோளுக்கு இணங்க போராட்டம் கைவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு, தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதன அதிகரிப்பை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியதாக தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், நேற்று முன்தினம் இரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்படுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அறிவிக்கப்பட்டபோதும், நேற்றைய தினமும் சில பெருந்தோட்டங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படாவிட்டால் தொழிற்சங்கங்களுக்கு சந்தா பணத்தை வழங்க போவதில்லை என தெரணியகலை, ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை மற்றும் தெஹியோவிட்ட ஆகிய தோட்டக்குழுக்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேகாலை, யட்டியாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்த குழுக்களின் பிரதிநிதி இதனை தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், தமது அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன், தொழிலாளர்களுக்கு நியாயமான வேதன அதிகரிப்பை பெற்றுத்தருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவர்களுள் ஒருவரான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக இலங்கை தொழில் வழங்குனர் சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் கூறியுள்ளார்.

கொட்டகலையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட ஆறுமுகன் தொண்டமான் இதனைத் தெரிவித்துள்ளார்.







Exclusive Clips