இலங்கை அணி 87 ஓட்டங்களினால் தோல்வி

Sunday, 16 June 2019 - 7:12

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+87+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF
உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் அவுஸ்திரேலிய அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி, 87 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

லண்டனில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 335 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, 45.5 ஓவர்களில் 247 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி, டக்வர்லுயிஸ் முறைப்படி 9 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 34.1 ஓவர்களில் 125 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, டக்வர்லுயிஸ் முறைப்படி 48 ஓவர்களில் 127 என்ற ஓட்ட இலக்கு தென்னாபிரிக்க அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கமைய, பதிலளித்தாடிய தென்னாபிரிக்க அணி, 28.4 ஓவர்களில் ஒரு விக்கட்டை இழந்து ஓட்ட இலக்கை கடந்து வெற்றியடைந்தது.

நேற்றைய போட்டிகளின் பின்னர், உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய அணி, 8 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

நியூஸிலாந்து அணி, 7 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும், இங்கிலாந்து அணி, 6 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும், இந்திய அணி, 5 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்திலும், இலங்கை அணி 4 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திலும் உள்ளன.

மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 புள்ளிகளுடன் முறையே 6ஆம், 7ஆம், 8ஆம் மற்றும் 9ஆம் இடங்களில் உள்ளன.

ஆப்கானிஸ்தான் அணி, எந்தவொரு புள்ளியையும் பெறாத நிலையில் இறுதி இடத்தில் உள்ளது.

இதேவேளை, இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
 
 
 
 







Exclusive Clips