Hirunews Logo
%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88..+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
Friday, 19 July 2019 - 19:26
சீரற்ற வானிலை.. பலி எண்ணிக்கை உயர்வு
3,593

Views
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி முதலான மாவட்டங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

சூரியவெவ 11 ஆம் கட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் தாயும், அவரது மகளும், மற்றுமொரு சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் 31 வயதுடைய தாயும், 3 மற்றும் 9 வயதுடைய சிறுமிகளே உயிரிழந்துள்ளனர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக குறித்த பகுதியில் பலத்த காற்று வீசிய சந்தர்ப்பத்தில், மரத்தின் அருகில் முச்சக்கரவண்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மரம் சரிந்து வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா - அக்கரப்பத்தனை - டொரிங்டன் தோட்டத்தில் நேற்று வெள்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், காணாமல் போன இரண்டாவது சிறுமியின் சடலம் இன்று மீட்கப்பட்டது.

குறித்த பகுதியிலுள்ள ஆறு ஒன்றில் நேற்று இரண்டு மாணவிகள் இழுத்து செல்லப்பட்டிருந்த நிலையில், அதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் உள்ள, கொத்மலை ஒயாவிற்கு நீர் ஏந்தி செல்லும் ஆற்றில் இருந்து இரண்டாவது சிறுமியின் சடலமும் இன்று மீட்கப்பட்டது.

டொரிங்டன் பாடசாலையில் தரம் 07 கல்வி கற்கும் 12 வயதுடைய இரட்டை சகோதரிகளான மதியழகன் லெட்சிமி, மதியழகன் சங்கீதா ஆகிய மாணவிகளே இவ்வாறு உயிரிழந்தனர்.

நேற்று பாடசாலையில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஆற்றின் ஊடாக செல்லும் அவர்களது தோட்டத்துக்கான பாலத்தை கடக்க முயற்சித்த வேளையில் அவர்கள் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கினிகத்தேனையில் சரிந்து விழுந்த கடைத்தொகுதியின் இடிபாடுகளுக்கு இடையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக இன்று அதிகாலை 10 வியாபார நிலையங்கள் வரையில் பள்ளத்தில் வீழ்ந்தன.

சம்பவம் இடம்பெறும்போது கடையொன்றில் தங்கி இருந்த ஒருவர் காணாமல்போய் இருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கண்டியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் உந்துருளியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியில் நேற்றிரவு இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் ஒருத்தொட்ட பகுதியிலிருந்து மஹியங்கனைக்கு பயணித்துக்கொண்டிருந்த போது மரம் ஒன்று முறிந்து அவரின் மீது வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து காயமடைந்த குறித்த நபர் தெல்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டனர்.

இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளம், மண்சரிவு, பலத்த காற்று மற்றும் வரட்சி முதலான அனர்த்தங்களின் காரணமாக 20 மாவட்டங்களில் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 972 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு இலட்சத்து 62 ஆயிரத்து 578 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மையம் இன்று மதியம் வெளியிட்டுள்ள நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லக்ஸபான, குக்குலேகங்கை, மேல்கொத்மலை முதலான நீர்த்தேக்கங்களின் சில வான்கதவுகள் தற்போதும் திறந்த நிலையிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜின் கங்கை, நில்வள கங்கை, கிரிந்தி ஓயா, மாதுறு ஓயா, யான் ஓயா உள்ளிட்ட கங்கைகளினதும், கிளை ஆறுகளினதும் நீர்மட்டம் சாதாரண நிலையில் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 44 பல நாள் மீன்பிடி படகுகள், சீரற்ற வானிலை காரணமாக, சர்வதேச கடல் எல்லைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவற்றுள் 30 படகுகள் மாலைதீவை அண்மித்த கடற்பரப்பை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.

அத்துடன், மேலும் 14 படகுகள் இந்திய கடற்பரப்பை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த படகுகளில் சுமார் 60 மீனவர்கள் கடற்தொழிருக்காக சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த அனைத்து படகுகளுக்கும் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு மாலைதீவு மற்றும் இந்திய அரசாங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top