Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..%21+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
Tuesday, 13 August 2019 - 16:49
வெள்ளம் மற்றும் மண்சரிவு எச்சரிக்கை..! மக்களே அவதானம்..!
1,102

Views
நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதிக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அம்பகமுவ, கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி பணிமனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதேநேரம் வடமேல் மாகாணம் மற்றும் கொழும்பு, கம்பஹா, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 75 முதல் 100 மில்லிமீற்றர் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று பகல் 12.30 நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதிக்குள் இரத்தினபுரி மாவட்டத்தின் கிரிஎல்ல பகுதியில் 110 மில்லிமீற்றர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, களனி கங்கை தெரணியகல மற்றும் கித்துல்கல ஆகிய பகுதிகளில் பெருக்கெடுக்கும் அபாயம் நிலவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

களுகங்கை இரத்தினபுரியிலும், கிங்கங்கை தவலமயிலும் பெருக்கெடுக்கும் அபாயம் நிலவுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த பகுதிகளில் தாழ்நிலங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கினிகத்ஹேன நகரில் அச்சகம் ஒன்று இயங்கி வந்த இரண்டு மாடி கட்டிடம் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

அத்துடன் கினிகத்ஹேன நகரில் மண்சரிவு ஏற்படக் கூடும் என அபாயம் நிலவுவதால் அங்கிருந்த மேலும் 7 வர்த்தக நிலையங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் ஜயசங்க பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹட்டன் - நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியின் காசல்ரீ கிளவட்டன் பகுதியில் இன்;று பிற்பகல் 3.30 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அந்த வீதியுடனான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மண்சரிவை அகற்ற தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நோட்டன்பிரிட்ஜ் மற்றும் லக்ஷபான, ஒஸ்போன் போன்ற பிரதேசங்களுக்கு செல்லும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top