சீரற்ற வானிலையால் 14 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிப்பு

Tuesday, 03 December 2019 - 13:08

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+14+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
சீரற்ற காலநிலை காரணமாக 14 மாவட்டங்களை சேர்ந்த 34 பிரதேச செயலாளர் பிரிவுகளில், 4 ஆயிரத்து 153 குடும்பங்களைச் சேர்ந்த 14 ஆயிரத்து 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 946 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 149 பேர் 29 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளால் 5 பேர் பலியானதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிக்க கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆறு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்தார்.

பதவிசிறிபுர, தம்பலகாமம், கந்தளாய், மொரவெவ, கிண்ணியா, மற்றும் பட்டணமும் சூழலும் பிரதேச செயலகங்களில் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உப்பாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளின் நலன் கருதி படகு சேவையினை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் யான் ஓயா நீர் தேக்கத்தின் வான் கதவு ஒன்று இன்று திறக்கப்பட உள்ளதாகவும், மீன் பிடிப்பதற்காக அப்பகுதிக்கு செல்லும் மீனவர்களை செல்ல வேண்டுமெனவும், வயல் பிரதேசங்களுக்கு செல்லும் விவசாயிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் யான் ஒயா திட்டத்தின் பொறியியலாளர் பிரதீப் வெலிவிட பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் அனர்த்தம் தொடர்பில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக படையினரை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் மேலும் குறிப்பிட்டார்.

பதுளை மாவட்டத்தில் 268 குடும்பங்களைச் சேர்ந்த 983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு 146 வீடுகள் பகுதி அளவிலும், ஒரு வீடு முழமையாகவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்தக முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

ஹப்புத்தளை, ஹல்துமுல்லை, லுணுகலை, வெலிமடை, பசறை, ஊவா பறணகம, எல்ல, பண்டாரவளை, ஹாலி-எல உள்ளிட்ட பகுதிகளில் சீரற்றக் காலநிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரத்து 651 குடும்பங்களைச் சேர்ந்த, 5774 பேர் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு 7 கட்டிடங்கள் பகுதி அளவிலும், 1 வீடு முற்றாகவும் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், 2 இடைத்தங்கல் முகாம்களில், 53 குடும்பங்களைச் சேர்ந்த 196 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 144 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 247 குடும்பங்களைச் சேர்ந்த 779 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 43 குடும்பங்களை;ச சேர்ந்த 138 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 551 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு 3 பேர் சீரற்றக் காலநிலையில் உயிரிழந்திருப்பதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் 6 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் 74 குடும்பங்களைச் சேர்ந்த 277 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் ஆயிரத்து 634 குடும்பங்களைச் சேர்ந்த ஐந்தாயிரத்து 335 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் 6 இடைத்தங்கல் முகாம்களில், 705 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 260 தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.