வெள்ளைத் தீவில் எரிமலை வெடிப்பு - சுற்றுலாப் பயணிகளை காணவில்லை

Monday, 09 December 2019 - 16:21

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
நியூசிலாந்து வைற் தீவில் இன்று திடீர் என ஏற்பட்ட எரிமலை சீற்றம் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இது தவிர 20 பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் பலர் காணாமல் போய் உள்ளனர்.

அத்துடன் மேலும் பலர் பலியாகியிருக்கலாம் என காவல்துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக எரிமலை சாம்பல் துகள்கள் மற்றும் புகையினை வெளிப்படுத்துவதற்கு முன்னர் அந்த பிரதேசத்திற்கு மிக அருகில் சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 50 பேர் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை என மீட்பு பணியாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த தீவிற்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் செல்வதனால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்த சரியான தவவல்கள் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிமலையில் இருந்து வெளிப்பட்ட சாம்பல் துகள்கள் வானத்தில் 12 ஆயிரம் அடிகளுக்கு மேல் பரவியுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் ஜோன் ரிம்ஸ் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள தீவிற்கு சென் ஜோன் அம்பியூலன்ஸ் ஏழு உலங்கு வானூர்திகளில் அத்தியாவசிய மருந்து வகைகளுடன் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் ஏற்பட்ட போது அந்த பகுதியில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் கூடியிருந்ததாக நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆடன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் அவுஸ்திரேலியாவும் பாதிப்படைந்துள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

சுமார் 20 அவுஸ்திரேலியர்களின் நிலைமை குறித்து தகவல்கள் எதனையும் பெற முடியாமல் உள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நியூசிலாந்தில் உள்ள எரிமலைகளில், வைற் தீவு எரிமலை செயல்பாட்டை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது.

இது சுற்றுலா பயணிகளின் கேந்திர பிரதேசமாக உள்ளதனால் வருடாந்தரம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அங்கு செல்கின்றனர்.

கடந்த 1914 ஆம் ஆண்டு இதே தீவில் ஏற்பட்ட எரிமலை தாக்கம் காரணமாக 12 கெந்தக சுரங்க தொழிலாளர்கள் பலியாகினர்.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டும் சிறிய அளவில் எரிமலை துகள்களை கக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.