தீர்மானம்

Tuesday, 14 January 2020 - 9:36

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+
நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான உறுப்பினர்களின் பெயர்களைக் கோருவதற்கு, நேற்று கூடிய கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கமைய நாளை மறுதினம் பிற்பகல் 3 மணிக்கு முன்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தெரிவுக்குழுவுக்கான தமது உறுப்பினர்களின் பெயர்களை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் 21ஆம் திகதிக்கான நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
 
நாடாளுமன்றத்தின் 114 ஆம் நிலையியல் கட்டளைக்கு அமைய, புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தெரிவுக்குழு நியமிக்கப்பட வேண்டும்.
 
அந்த தெரிவுக்குழுவின் ஊடாகவே ஏனைய குழுக்களுக்கான உறுப்பினர்களை பெயரிடுதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
 
அதேநேரம், எதிர்வரும் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகளை பிற்பகல் 1 மணி முதல் மாலை 6.30 மணிவரை நடத்துவதற்கும், 23ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகளை முற்பகல் 10.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை  நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
 
இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி மீன்பிடி மற்றும் நீர்வளங்கள் சட்டத்தின் கீழ் 9 ஒழுங்கு விதிகளும், 22ஆம் திகதி நிர்மாணத்துறை மற்றும் அபிவிருத்தி சட்டத்தின் கீழான 3 ஒழுங்கு விதிகளும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.