அமிதாப் பச்சன் எப்படி இருக்கிறார்..? சற்றுமுன்னர் வெளியான தகவல்

Wednesday, 15 July 2020 - 17:17

%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..%3F+%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி அனைத்து தரப்பினரையும் வெகுவாக பாதித்து வருகிறது.

இந்த சூழலில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அமிதாப் பச்சனின் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர். நாடு முழுவதும் பல்வேறு விதமான பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் மீண்டு வர வேண்டுமென்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நானாவதி மருத்துவமனையின் தகவல்தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் உடல்நிலை சீராக இருக்கிறது. தனி அறையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அபிஷேக் பச்சன், எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் யாரும் பீதி அடைய வேண்டாம். அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அமிதாப் பச்சனுக்கு வயது 77.

பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் படப்பிடிப்பில் பங்கேற்க இயலாத நிலையில் இருக்கிறார்.

அதேசமயம் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு இடையே படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட சில நடிகர்களில் ஒருவராக அபிஷேக் பச்சன் இருப்பது குறிப்பிடத்தக்கது.