சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை...!

Wednesday, 16 September 2020 - 15:15

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88...%21
நீதிமன்றத் தடை உத்தரவைமீறி திலீபனின் நினைவேந்தலை நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு, கடும் எச்சரிக்கையின் பின் 2 லட்சம் ரூபாய் சரீர பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதவிர, அவருடன் கைதுசெய்யபட்ட, வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதியும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான நேற்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராயில் நினைவேந்தல் செய்திருந்தார்.

இதனையடுத்து எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அவருக்கு வாடகைக்கு முச்சக்கர வண்டியைச் செலுத்திய சாரதியையும் காவல்துறையினர் நேற்று கைது செய்திருந்தனர்.

இந்தநிலையில் இன்று அவர்கள்இருவரும் யாழ்ப்பாண நீதவான் ஏ.பீற்றர் போலிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை நீதிமன்றத் தடை உத்தரவை மீறி நினைவுகூர்ந்த குற்றச்சாட்டின் கீழ் இருவருக்கும் எதிராக மன்றில் டீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வில் சந்தேகநபர்களால் பயன்படுத்தபட்ட பதாகையில் 'ஈழம்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அது இலங்கையிலிருந்து பிரிக்க முற்படும் நாட்டைக் குறிக்கும்.

எனவே நீதிமன்றத் தடையை மீறி மேலும் பலர் அஞ்சலி நிகழ்வை நடத்த உள்ளதால் சந்தேக நபர்கள் இருவரையும் பிணையில் செல்ல அனுமதிக்காது 14 நாடகள்; விளக்கமறியல் உத்தரவை பிறப்பிக்குமாறு காவல்துறையினர் கோரியிருந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் கடும் எச்சரிக்கையின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணை, எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் என்.சிறீகாந்தா, உள்ளிட்ட 8 சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இதேவேளை கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் அல்லது ஏனைய பிரதேசங்களிலும் திலீபனின் நினைவு நிகழ்வுகளை நடத்தக்கூடாது என அறிவித்து, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

கிளிநொச்சி அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மாவட்ட அலுவலகத்திற்கு சென்ற கிளிநொச்சி காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் குறித்த தடையுத்தரவின் பிரதியினை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எந்தவிதமான அஞ்சலி நிகழ்வுகள் அல்லது ஊர்வலங்கள் கூட்டங்கள் நடத்தப்பட கூடாது என தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மன்னாரிலும் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதித்து மன்னார் நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது

அதேபோன்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களிலும் நீதிமன்றங்கள் திலீபனின் நினைவேந்தலை நடத்த தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.