நாட்டில் காணப்படும் கொரோனா தொற்று குறித்த முழுமையான தகவல்..!

Thursday, 29 October 2020 - 19:39

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D..%21
பலாங்கொடை - இம்புல்பே பகுதியில் 2 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அம்பலாங்கொடை மீன் சந்தையில் பணியாற்றிய ஒருவருக்கும், கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய மேலும் ஒருவருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் பூண்டுலோயா நகரம் முடக்கப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தின் நுழைவு பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேருக்கும் தொழில் அமைச்சின் சாரதி ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

கட்டிடத்தின் அடித்தளத்தில் உணவகத்தினை நடத்தி சென்றவர் அண்மையில் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றிருந்த நிலையில் அவரின் ஊடாக இவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

உணவகத்தின் உரிமையாளர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய போதும் அவருக்கு தொற்று ஏற்படவில்லை.

எனினும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது அவருக்கு குறித்த சாரதியால் உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ள பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேரும் குறித்த சாரதியுடன் தொடர்பை பேணியிருக்கலாம் என சந்தேககிக்கப்படுகிறது.

அத்துடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் சிலர் கொவிட்19 பரவலால் பாதிக்கப்பட்டுள்ளதால் மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணி குறித்த விசாரணயை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் இருந்து வேறொரு பிரிவுக்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பதில் காவல்துறைமா அதிபருக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாதி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை,பேலியகொடை மீன் சந்தையின் அருகில் நிர்மாண பணியில் ஈடுப்பட்டிருந்த மஸ்கெலியா டி சயிட் தோட்டத்தின் 7 பேர் உள்ளிட்ட அவர்களின் குடும்பங்களின் 25 உறுப்பினர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது

இதேவேளை, யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட 200க்கும் அதிகமான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன.

யாழ்ப்பாண போதனா மருத்துவ மனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் இதுவரை 52 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் லதாகரன் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் மூன்று பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, பெரிய போரதீவு - பட்டாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், வாழைச்சேனை பகுதியை சேர்ந்த இருவருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியானதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், பண்டாரவளை மரக்கறி மொத்த வியாபார சந்தையின் வர்த்தகர் உள்ளிட்ட மூன்று பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அண்மையில், பண்டாரவளை மரக்கறி மொத்த வியாபார சந்தை தொகுதியில் உள்ள வர்த்த நிலையம் ஒன்றின் இளைஞர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானது.

இதனையடுத்து அவருடன் தொடர்புடையோர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், குறித்த இளைஞரின் தந்தைக்கும், அவரது ஏனைய குடும்ப உறுப்பினர்கள் இருவருக்குமே இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹப்புத்தளை தோட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்துவந்த 39 வயதுடைய அப்புத்தளை தோட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த 25 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்றுறுதியானது.

இந்தநிலையில், அவரின் 62 வயதுடைய தயாருக்கே தற்போது கொவிட்19 தொற்றுறுதியானதாக ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சுதர்ஷன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

குறித்த நபரின் தயார் உள்ளிட்ட மூன்று குடும்பத்தை சேர்ந்த 10 ற்கும் மேற்பட்டோர் கடந்த 25ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் ஹப்புத்தளை நகருக்கு வரும் பொது மக்கள் உரிய சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் தேவையற்ற விஜயங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சுதர்ஷன் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.