மணிக்கு 85 கிலோமீற்றர் வேகத்தில் திருகோணமலையை நெருங்கும் “புரெவி” சூறாவளி

Wednesday, 02 December 2020 - 20:49

%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+85+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E2%80%9C%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E2%80%9D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF
தென்கிழக்கு கடற்பரப்பில் உருவாகிய புரெவி சூறாவளி தற்போது திருகோணமலையில் இருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளி முல்லைத்தீவு ஊடாக மன்னார் சென்று, அங்கிருந்து நாளை அதிகாலை அரபிக்கடலை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த சூறாவளை தரையைத் தொடும் போது மணிக்கு 75-85 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் வீசும் எனவும், அதன்பின்னர் அதன் வேகம் மணிக்கு 95 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியின் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் கடும் காற்றுடனான மழை வீழ்ச்சி பதிவாகியதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அங்கு சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, வடத்திய, மேற்கு, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, புரெவி சூறவாளியிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

மாவட்டத்தில் 237 தற்காலிக இடைத்தங்கல் நிலையங்கள் இதுவரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் 21 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 75ஆயிரம் அங்கத்தவர்கள் தங்க முடியும்.

குறிப்பாக கரையோரங்களில் மற்றும் அவதானம்மிக்க பிரதேசங்களில் உள்ள மக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடைத்தங்கல் நிலையங்களுக்கு செல்லுமாறும் இடைத்தங்கள் நிலையங்களில் மக்களுக்கான ஏற்பாடுகள் உரிய முறைப்படி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

திருகோணமலையில், இன்று மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் மொத்தமாக 279 குடும்பங்கள் தற்காலிக இடைத்தங்கல் நிலையங்களிலும் 1700 குடும்பங்கள் உறவினர் வீடுகளிலும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் கணுக்கேணி குளத்தினை அன்மித்த பகுதியில் இன்று நன்பகல் 12.30 முதல் 4.30 வரை 67 மில்லிமீற்றர் மழை பதிகாகியுள்ளதுடன் கணுக்கேணி குளம் வான் பாய ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

இதேவேளை, தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 156 குடும்பங்களை சேர்ந்த 586 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு யாழ்ப்பாண - சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், குறித்த நபரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா கூறியுள்ளார்.

தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் 83 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.

கல்லுணடாய் பகுதியில் ஒரு இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகமைத்துவ புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

9 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் சீரற்ற வானிலை காரணமாக 2 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.