நாளை காலை இலங்கை வரும் கொவிட் தடுப்பூசிகள்!

Wednesday, 27 January 2021 - 10:39

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தருவிக்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் நாளை காலை 11 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க இதனை தெரிவித்தார்.

நாளை காலை குறித்த தடுப்பூசிகளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்திய அதிகாரிகள் கையளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த தடுப்பூசிகள் எயார் இந்தியா விமான சேவையில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.

5 லட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறுகின்ற நிலையில், அவற்றை 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பயன்படுத்த முடியும்.

இந்த தடுப்பூசிகளை இலங்கையின் ஒளடதக் கட்டுப்பாட்டு சபை மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் என்பன அங்கீகரித்துள்ளன.

நாளை மறுதினம் முதல் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசி, இந்தியாவின் சீரம் நிறுவனத்தினால் அஸ்றாசெனீகா கொவிஷீல்ட் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் கிடைத்ததன் பின்னர், முதற்கட்டமாக சுகாதார தரப்பினருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முதற்கட்டமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுகாதார தரப்பினர் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டாம் கட்டமாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் பாதுகாப்பு தரப்பினர் உள்ளதோடு, அவர்களில் விமான சேவை அதிகாரிகள், மற்றும் தனிமைப்படுத்தல் நிலையத்தின் அதிகாரிகளும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மூன்றாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டார்.

இதற்கிணங்க சராசரியாக மூன்று தசம் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசியை செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அவர்களிலும் நாட்பட்ட நோய் உடையவர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.

அவர்களுக்கு செலுத்துவதற்காக எமக்கு 70 லட்சம் தடுப்பூசிகள் அவசியமாகவுள்ளன.

இந்த திட்டத்திற்கமையவே தற்போது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை சீன அரசாங்கத்திடமிருந்து மூன்று லட்சம் ஷைனோஃபாம் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டார்.