சமிந்த வாஸ் நாடு குறித்து சிந்திக்காது தீர்மானம் மேற்கொண்டமை கவலையளிக்கின்றது - நாமல் ராஜபக்ஷ

Tuesday, 23 February 2021 - 13:51

%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7
சமிந்த வாஸ் இறுதித் தருணத்தில் நாடு குறித்து சிந்திக்காது தீர்மானம் மேற்கொண்டமை கவலையளிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சமிந்த வாஸின் விடயம் தொடர்பில் தான் தனிப்பட்ட விதத்தில் வருத்தமடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன.

ஒரு பக்கத்தில் அவர் சிறந்த வீரர்.

மறுபக்கத்தில் வீரராக இருந்தாலும், பயிற்றுவிப்பாளராக இருந்தாலும் தமது ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான முறைமை ஒன்று உள்ளது.

இதற்கமைய அவர் ஒரு தொகை கொடுப்பனவு அடிப்படையில், கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

இதற்கிணங்க சுற்றுப்பயணம் ஒன்று செல்லும் போது சுற்றுப்பயணத்துக்கான குறித்த தொகை செலுத்தப்படும் என்று நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரவிந்த டி சில்வாவின் தலைமையில் அண்மையில் கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்த குழுவினரால் கிரிக்கெட் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

இதற்கிணங்க சமிந்த வாஸை பயிற்றுவிப்பாளராக பெயரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட பின்னர் கிரிக்கெட் சபையுடனேயே ஒப்பந்தம் தொடர்பான தீர்மானங்கள் அமைகின்றன.

இவ்வாறு தெரிவு இடம்பெற்றதன் பின்னர் இறுதி தருணத்தில் அவர் கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், இந்த கொடுப்பனவு தொடர்பில் கருத்துரைப்பதற்கோ, அல்லது நியாயத்தை கூறுவதற்கோ தாம் தயாராக இல்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் நிறைவேற்று அதிகாரிகளின் விருப்பத்திற்கு இணங்க கொடுப்பனவுகளை வழங்க முடியாது.

இதற்கு கிரிக்கெட் சபையின் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் கடந்த காலத்தில் போன்று 'கோப்' குழுவிற்கு செல்ல நேரிடும்.

இதற்கமைய இந்த சுற்றுப்பயணத்திற்கு மாத்திரம் ஏழரை லட்சம் ரூபா செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்த்திற்கு அமைய செயற்படும் போது, ஒப்பந்நத்திற்கு மேலதிகமாக, 'சுற்றுப்பயண கொடுப்பனவு' ஒன்று வழங்க்கப்படும்.

இந்த 'சுற்றுப்பயண கொடுப்பனவுக்கு மேலதிகமாக குறித்த ஏழரை லட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு கிரிக்கெட் சபை இணங்கியிருந்தது.

எவ்வாறாயினும் சமிந்த வாஸ் இந்த ஏழரை லட்சம் ரூபா கொடுப்பனவை ஏற்றுக்கொள்ளாது பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார்.

இதனை கிரிக்கெட் சபை ஏற்றுக்கொண்டுள்ளது.

கிரிக்கெட் சபைக்கும், அவருக்கும் இடையிலான ஒப்பந்தம் என்பதால் , அது தொடர்பில் தான் கருத்துரைக்க விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் நாடு என்ற ரீதியில் தமது அணி வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்வதற்கு 4 மணித்தியாலத்திற்கு முன்னர் அவர் பதவி விலகியமை தொடர்பில் தாம் கவலையடைவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.