வடகொரியாவை ஆத்திரப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி

Sunday, 02 May 2021 - 15:17

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம், வடகொரியா தொடர்பிலும், அதன் அணுதிட்ட மூலோபாயம் குறித்தும் தகவல் வெளிப்படுத்த தயாரென தெரிவித்துள்ளமைக்கு வட கொரியா கண்டனம் வெளியிட்டுள்ளது.

இந்த விடயத்தில், அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாகம் எதிர்ப்புக் கொள்கையினை முன்னெடுப்பதாக வட கொரிய வெளிவிவகாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

வட கொரியாவின் அணு ஆயுத திட்டம், சர்வதேசத்தின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக உள்ளதென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

வடகொரியாவுடனான அணுகுமுறையினை அளவீடு செய்வதுடன், அவதானிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், வட கொரியா தொடர்பான அமெரிக்காவின் கொள்கையினை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில், ஜனாதிபதி பரிசீலித்து வருவதாகவும் வெள்ளை மாளிகையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

வட கொரியாவின் செயல்பாடுகள் குறித்து, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களுடன், அமெரிக்கா விரைவில் கலந்துரையாடவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வடகொரியா இன்று (02) காலை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், அமெரிக்க ஜனாதிபதியினால் வடகொரியா குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் சகிக்க முடியாததும், பாரிய தவறானதுமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.