பிரியா – நடேஸ் குடும்பத்தினர் கிறிஸ்மஸ் தீவு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டனர்!

Tuesday, 15 June 2021 - 14:35

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E2%80%93+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%21
கிறிஸ்மஸ் தீவில் தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கையர்களான பிரியா – நடேஷ் குடும்பத்தினரை குறித்த தடுப்பு முகாமிலிருந்து விடுவித்து, அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் தற்காலிகமாக வசிப்பதற்கு அனுமதிப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்று  அறிவித்துள்ளது.

இதையடுத்து, தற்போது கிறிஸ்மஸ் தீவிலுள்ள நடேசலிங்கம், மூத்த மகள் கோபிகா ஆகியோரும், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைய மகள் தருணிக்கா, அவருடன் தங்கியுள்ள தாய் பிரியா ஆகியோருக்கு பேர்த் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தருணிக்காவுடன், தாய் பிரியா வைத்தியசாலையில் தங்கியுள்ள நிலையில், தந்தை நடேசலிங்கமும் மூத்த மகள் கோபிகாவும் தொடர்ந்தும் கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தமது குடும்பத்தினரை ஒன்றிணைக்க உதவி புரியுமாறு பிரியா நடேஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், இக்குடும்பத்தினர் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு பேர்த் நகரில் தற்காலிகமாக வசிக்க அனுமதிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹோக் இன்று அறிவித்தார்.

நடேஷ் எனப்படும்  நடேசலிங்கம் முருகப்பன் 2012ஆம் ஆண்டு படகு மூலமாக அவுஸ்திரேலியா சென்றதுடன், பிரியா 2013 ஆம் ஆண்டு படகு மூலமாக அவுஸ்திரேலியா சென்றார்.
இவர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் சந்தித்து  திருமணம் கொண்டனர். அவுஸ்திரேலியாவின் குயின்லாந்து மாநிலத்திலுள்ள பிலோயலா நகரில் நான்கு ஆண்டுகளாக வசித்து இத்தம்பதியினருக்கு கோபிகா, தருணிக்கா என்ற இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரியாவின் இணைப்பு விசா காலாவதியாகிய நிலையில், நடேசலிங்கம், பிரியா தம்பதியினரை அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை கைது செய்தது. இதனையடுத்து, அவர்கள் முன்வைத்த புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன். இத்தம்பதியினரை அவர்களது பிள்ளைகளுடன் நாடு கடத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இதற்கு எதிராக பிலோயலா மக்கள் போராட்டங்கள் மேற்கொண்டதுடன், நாடு கடத்தல் தீர்மானத்துக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அம் முயற்சி தோல்வியடைந்த நிலையில், அவர்களை நாடு கடத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும், இதற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டதையடுத்து நாடு கடத்தல் முயற்சிகள் தடுக்கப்பட்டன.

2018 ஆம் ஆண்டு மார்ச் முதல் இக்குடும்பத்தினர் மெல்பர்னிலுள்ள தடுப்பு முகாமில் ஒன்றரை வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். எனினும், மேன்முறையீட்டு மனுவை அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

இதையடுத்து இக்குடும்பத்தினரை இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசு மீண்டும் முன்னெடுத்தது. பின்னர், 2019 ஆகஸ்ட் மாதம் இவர்கள் விசேட விமானமொன்றில் நாடு கடத்தப்பட்டனர்.

எனினும் இத்தம்பதியினரின் இரண்டாவது மகள் தருணிக்கா அவுஸ்திரேலியாவில் பிறந்தவர் என்பதால் அவரை நாடுகடத்த முடியாது என்ற அடிப்படையில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து, நீதிமன்றம் நாடுகடத்தலுக்கு எதிராக தடை உத்தரவை பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து விமானம் அவுஸ்திரேலியாவுக்கு திரும்பியிருந்த நிலையில் நடேஸ் குடும்பத்தினர் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

தருணிக்கா தொடர்பில் முன்வைக்கப்பட்ட மனு தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களை நாடுகடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.