வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்கு தீர்மானம்

Wednesday, 08 September 2021 - 13:39

%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான காணிகளில் வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக தனியார்துறை முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் குறித்த காணிகள் வழங்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த யோசனைக்கு அமைச்சரவையும் அனுமதியளித்துள்ளது.

இலங்கையின் திரவப்பால் தேவையின் 40 வீதமானவை உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுவதுடன், ஏனையவற்றை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் 50 பில்லியன் ரூபாய்கள் செலவிடப்படுகின்றன.

அதனால், பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமையொழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான யோசனைகள் இலங்கை முதலீட்டு சபையால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை முதலீட்டுச் சபை, ஆர்வம் காட்டும், முதலீட்டாளர்களின் யோசனைகளைக் கோரியுள்ளது,

குறித்த சபையின் தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கருத்திட்ட யோசனைகளை சமர்ப்பித்தவர்களுக்கு தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணைகளில் தற்போது பயன்படுத்தாத காணிகள் மற்றும் பயன்பாட்டுக்கு உட்படுத்தாத ஏனைய அரச காணிகளை நவீன பால் பண்ணைகளாக அபிவிருத்தி செய்வதற்காக 30 வருடங்கள் நீண்டகால குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.