கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்

Wednesday, 08 September 2021 - 14:50

%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
கவிஞர் புலமைப்பித்தன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை - அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று தனது 85 ஆவது வயதில் காலமானார்.

நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1964ஆம் ஆண்டு திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக தனது சொந்த ஊரான கோயம்புத்தூரிலிருந்து புலமைப்பித்தன் சென்னை சென்றார்.

1968ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்த கோயில் திரைப்படத்திற்காக அவர் எழுதிய ”நான் யார் நான் யார்” என்ற பாடலின் மூலம் அவர் மிகவும் புகழ் பெற்றார்.

அதன்பிறகு அடிமைப் பெண் படத்தில் அவர் எழுதிய ”ஆயிரம் நிலவே” பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அத்துடன் புலமைப்பித்தனின் வரிகளில்  இதயக்கனி படத்தில் இடம்பெற்ற ”நீங்க நல்லா இருக்கோனும்” பாடலும் மிகவும் பிரபலமானது. 

தனது பாடசாலை கல்வியை நிறைவு செய்ததன் பின்னர் பஞ்சு ஆலை ஒன்றில் கடமையாற்றியதுடன், பேரூர் தனித்தமிழ் கல்லூரியில் படித்து புலவர் பட்டம் பெற்றார்.

அதன் பிறகு 12 ஆண்டுகள் தமிழாசிரியராக நெல்லை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் கடமையாற்றினார்.

அதன்பின்னர், எம். ஜி. ஆர். உதவியால், சினிமா படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பாடசாலையில் படிக்கும் காலத்தில் இருந்தே இவர் திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

பிறகு எம். ஜி. ஆர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, அ. தி. மு. கவை தொடங்கியபோது, ஆசிரியர் பணியிலிருந்து விலகி, அ. தி. மு. கவில் இணைந்தார் புலமைப்பித்தன்.

அ. தி. மு. க. ஆட்சிக்கு வந்தபிறகு, 1978ஆம் ஆண்டு, அவர் 'மேல் சபை' உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

இவர் சினிமாவுக்கு பாடல்கள் எழுதியது மட்டுமல்லாமல், "புரட்சித்தீ", "பாவேந்தர் பிள்ளைத்தமிழ்" ஆகிய கவிதை புத்தகங்களையும், "எது கவிதை" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.