அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்: புதிதாக வகைப்படுத்தப்பட்ட ஆவணம் வெளியீடு

Sunday, 12 September 2021 - 21:14

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ (FBI) புதிதாக வகைப்படுத்தப்பட்ட ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள சவூதி அரேபிய பிரஜைகளுக்கும் தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும், சவூதி அரசாங்கம் இந்த விடயத்தில் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என புலனாய்வுத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் பாதிப்படைந்துள்ளவர்களின் உறவினர்கள் சவூதி அரேபிய அரசாங்க அதிகாரிகளுக்கு தாக்குதல் குறித்து தகவல்களை அறிந்திருந்த போதிலும், அதனை தடுக்க முயற்சிக்கவில்லை என குற்றம் சாட்டிவருகின்றனர்.

தாக்குதல்களை மேற்கொண்ட 19 தாக்குதல்தாரிகளில் 15 பேர் சவூதி அரேபிய பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புலனாய்வுப் பிரிவின் அறிக்கையினை வொஷிங்டனில் உள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் வரவேற்பதாக தெரிவித்துள்ளதுடன், தாக்குதல்தாரிகளுக்கும் சவூதி அரசாங்கத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என மீண்டும் மறுத்துள்ளது.

தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு மாணவர்கள் என தெரிவித்து அமெரிகாவிற்குள் நுழைந்துள்ளனர்.

லொஸ் ஏஞ்லிஸிலுள்ள  சவூதி அரேபிய உதவி தூதுவராலயத்துடன் தொடர்பு கொண்ட பிரபலமான ஒருவருடன் தாக்குதல்தாரிகள் நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, லொஸ் ஏஞ்லிஸிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் தலைவரான கிங் பஹாட் என்பவர் தீவிரவாத நம்பிக்கைகள் கொண்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இரு தாக்குதல்தாரிகளுடன் தொடர்பை கொண்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முன்னாள் ஜனாதிபதிகளான ஜோர்ஜ் புஷ், பராக் ஒபாமா மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் நிர்வாகிகள், தேசிய பாதுகாப்பு காரணங்களை காட்டி ஆவணங்களை வெளியிட மறுத்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விசாரணைகளின் பெறுபேறுகளை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் வெளியிடுவதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் நீண்ட காலமாக நெருங்கிய நட்பு நாடுகளாக திகழ்கின்றன.

அதேவேளை, 20 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உணர்வுபூர்வமாக மக்கள் தமது அஞ்சலியை தொடர்ந்தும் செலுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் பல மாநிலங்களில் இடம்பெற்ற இந்த துன்பியல் நிகழ்வுகளில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் அரச தலைவர்கள் பலர் அனுஷ்டிப்புகளில் பங்கு கொண்டனர்.

குறிப்பாக தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் ஜனாதிபதியாக செயல்பட்ட ஜோர்ஜ் டபிள்யூ புஷ் முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், பராக் ஒபாமா டொனால்ட் ட்ரம்ப உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அல்-கைதா பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்களில் மொத்தமாக இரண்டாயிரத்து 977 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

அவர்களில், ஆக குறைந்த 2 வயதான குழந்தை ஒன்றும் ஆகக் கூடிய வயதான 82 வயதைக் கொண்டவர் ஒருவரும் பலியானமை குறிப்பிடத்தக்கது.