கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்

Thursday, 23 September 2021 - 14:40

%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து அஜித் நிவாட் கப்ரால் நீக்கப்பட வேண்டும் எனக் கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் சட்டமா அதிபர், நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கியின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய, அரசியல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய நபரொருவரை மத்திய வங்கி ஆளுநராக நியமிக்க முடியாது என்றும், அஜித் நிவாட் கப்ரால் நேரடியாக அரசியலில் ஈடுபட்டிருந்த நபர் எனவும் மனுஷ நாணயக்கார தமது அடிப்படை உரிமை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

1999 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, மேல் மாகாண சபைக்கு தெரிவான கப்ரால், பின்னர் 2004 ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக செயற்பட்டார்.

அதன்பின்னர் அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்துள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். பின்னர் மத்திய வங்கிய ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பதவி விலகினார். எனவே, அதனூடாக அவரது அரசியல் பிணைப்பு புலப்படுவதாகவும்  மனுதாரர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக உறுப்பினரான அவர், கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு தெரிவாகி நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இதனையடுத்து, அப்பதவியிலிருந்து விலகிய அவர் அன்றைய தினம் இரவே மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிணைமுறி மோசடி தொடர்பில் இடம்பெற்ற தடயவியல் கணக்காய்வின்போதும் அஜித் நிவாட் கப்ரால் தொடர்பில் விசாரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மோசடியுடன் தொடர்புடைய பர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக அவரின் சகோதரி ஷிரோமி நொயெல் விக்ரமசிங்க செயற்பட்டுள்ளதாக மனுஷ நாணயக்கார தமது மனுவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தகைய நபரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி மற்றும் நிர்வாகிகள் எடுத்த முடிவு தமது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.