24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களால் நால்வர் பலி!

Monday, 29 November 2021 - 7:36

24+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
இன்று (29) காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் காரணமாக 4 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதன்படி நேற்று (28) பிற்பகல் கட்டுகஸ்தோட்டை வட்டாரம்தென்ன தர்மராஜா பிரிவெனாவுக்கு அருகில் உள்ள தொடருந்து மார்க்கத்தில்  மாத்தளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வட்டபுலுவ பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஸ்யால பகுதியில் வீதியோரத்தில் சென்ற பெண் ஒருவர் கண்டி நோக்கி வேகமாக பயணித்த வாகனமொன்றில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நுகவெலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தின் பின்னர் தப்பிச் சென்ற சந்தேகநபரான சாரதியை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நோயாளர் காவு வாகனமொன்றுக்கு வழிவிட எத்தணித்து ,பணாமுர - சூரியகந்த - எம்பிலிப்பிட்டிய வீதியின் கலமட சந்திக்கு அருகில் உந்துருளியொன்று தடுப்பை செயற்படுத்தியபோது, எதிரே வந்த நோயாளர் காவு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி ஓட்டுநரும், அதில் பயணித்தவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உந்துருளி செலுத்திய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் நேற்று (28) அத்துருகிரிய - மாலபே பிரதான வீதியில் அதிவேக நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மாலபேயில் இருந்து அத்துருகிரிய நோக்கி பயணித்த இராணுவ ட்ரக் வண்டியொன்று எதிர்திசையில் வந்த உந்துருளியுடன் மோதியதில் உந்துருளியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தெற்கு தலங்கம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும் இராணுவ ட்ரக்கை செலுத்திச் சென்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.