யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பட்டப் பகலில் திரைப்பட பாணியில் வாகனத்தால் மோதி விபத்தை ஏற்படுத்தி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த நால்வர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாகம் பகுதியில் மகிழுந்தில் பயணித்த நபர் மீது பட்டா ரக வாகனத்தில் பயணித்த பிறிதொரு குழுவினர் மோதி விபத்தை ஏற்படுத்தினர்.
இதனையடுத்து அவர் மீது வாள்வெட்டு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த இடத்தில் காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் களம் இறக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.