ஊடகத்துறையில் பிரித்தானியாவிற்கு இணையான சட்டங்களை அறிமுகம் செய்ய எதிர்பார்ப்பு

Tuesday, 06 June 2023 - 13:33

%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஊடகத்துறையில் பிரித்தானியாவிற்கு இணையான சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

இதேவேளை, ஊடகங்களை ஒடுக்குவதற்காக புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தை முழுமையாக எதிர்ப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்திருந்தார்.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் தலைமையில் பந்துல குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, கெஹெலிய ரம்புக்வெல, மனுஷ நாணயக்கார ஆகிய அமைச்சர்கள் அங்கம் வகித்த உபகுழு தயாரித்த ஆவணம் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்ட மூலம் என்ற பெயரில் புகுத்தப்பட்டுள்ள புதிய சட்டங்கள் வாயிலாக இலத்திரனியல் ஊடகங்களின் அனுமதி பத்திரங்களை இரத்துச் செய்வதற்கும், தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும், ஊடகவியலாளர்களை கைது செய்வதற்கும், சிறைத்தண்டனை விதிப்பதற்கு, அபராதம் விதிப்பதற்கு, ஊடக நிறுவனங்களுக்குள் அத்துமீறி நுழைவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெறுகின்றது.

இந்த நிலையில் பிரதான எதிர்கட்சி மற்றும் எதிர்கட்சியுடன் இணைந்து செயற்படும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களும் ஏகமனதாக எதிர்ப்பினை வெளிப்படுத்த தீர்மானித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தகவல் அறியும் அடிப்படை உரிமையை இல்லாமல் செய்யும் யோசனையாகவே ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டம் காணப்படுவதாக ஊடகத்துறை ஊழியல் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் புதிதாக கொண்டுவரப்படவுள்ள சட்டம் ஊடகத்துறையை நசுக்குவதற்கான ஒரு செயல் அல்லவென கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டிற்கு தற்போது பொருளாதார சீர்த்திருத்தமே அவசியமானது மாறாக புதிய சட்ட மூலம் அவசியமற்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது விதிக்கப்பட்டுள்ள இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரியினை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.