மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் - தூதுவர் ஜூலி சங்!

Tuesday, 06 June 2023 - 17:58

%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%21

மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்கால பாதையை சிறப்பாக மாற்றுவதற்கான தருணமே இது. மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் அழைப்பின் பேரில் நுவரெலியா மாவட்டத்துக்கு களப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், பல தரப்பு சந்திப்புகளில் ஈடுபட்டதுடன், மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இவ்விஜயத்தின் ஓரங்கமாக ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்துக்கு சென்ற அமெரிக்க தூதுவருக்கு, உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

அதன்பின்னர் அதிகாரிகள் மற்றும் அங்கு பயிற்சிபெறும் மாணவர்களுடன் தூதுவர் கலந்துரையாடினார். இதன்போது, இருதரப்பு உறவுகளுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காந்தி சௌந்தர்ராஜன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப கல்விக்கு உதவிகள் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அத்துடன், கல்வி, சுகாதாரம் என மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இணக்கம் தெரிவித்தார்.

மேலும், "நுவரெலியா மாவட்டம் உட்பட ஏனைய பகுதிகளில் வாழும் மலையக பெருந்தோட்ட மக்கள் கடந்த காலங்களில் பல சவால்களை எதிர்கொண்டனர்.

பல தடைகள் இருந்தன. இதனை நான் அறிவேன். எனவே, மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்காலத்துக்கான பாதையை மாற்றுவதற்கான சிறந்த தருணமே இது.

இலங்கை தற்போது மீண்டெழுகின்றது. வர்த்தகம் மற்றும் முதலீடுகளை கொண்டு வருவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். உங்களுக்கு உதவுவதற்கான பங்காளியாக நாம் இருப்போம்." என்று குறிப்பிட்டார்.