அமரிக்காவின் குற்றவியல் நீதிக்கான இராஜாங்க அலுவலக விசேட ஒருங்கிணைப்பாளர் டடாட் புச்சன்வல்ட் மற்றும் தெற்காசிய மற்றும் மத்திய ஆசியாவுக்கான இராஜாங்க திணைக்களத்தின் பிரதி உதவி செயலாளர் மன்ரீட் அனன்டும் இலங்கை விஜயத்தை நிறைவு செய்துகொண்டனர்.
இலங்கையில் உள்ள அமரிக்கா தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் அவர்கள் தங்கியிருந்த காலப்பகுதியில் அரசியல் தலைவர்கள் மற்றும் குடியியல் சமூக தலைவர்களையும் சந்தித்து நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தினர்.
குறித்த சந்திப்புக்கள், இலங்கை தொடர்பான எதிர்கால திட்டங்களுக்கு உதவியளிக்க கொள்கைளை வகுக்க வழியை ஏற்படுத்தும் என்று இலங்கைக்கான அமரிக்க தூதுவர் அடுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளையும் சவால்களையும் தெரிந்துக்கொண்டதாக டடாட் புச்சவல்ட் தெரிவித்தார்.
இந்த பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, வடக்கின் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன், வடக்கின் ஆளுநர் ரெஜீனோல்ட் குரே ஆகியோரையும் சந்தித்தனர்.
தென்னிலங்கையில் அவர்கள், கண்டியில் பௌத்த பீடாதிபதிகளை சந்தித்து உரையாடினர்.