ஜனாதிபதித் தேர்தல் பிற்போவதற்கு காரணமாக அமையாது...

Friday, 16 August 2019 - 13:35

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81...
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதானது, தேர்தல் சட்டத்துக்கு அமைய, எந்தவொரு வகையிலும் ஜனாதிபதித் தேர்தல் பிற்போவதற்கு காரணமாக அமையாது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
தேர்தல் சட்டத்திற்கு அமைய, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் என்பனவற்றை ஒரே தினத்தில் நடத்துவதற்கோ அல்லது அண்மித்த தினங்களில் நடத்துவதற்கோ தடை இல்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண சபை தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாண சபைகளினதும் அதிகார காலம் நிறைவடைந்துள்ள நிலையில், அவை அனைத்தும் ஆளுநர்களினால் நிர்வகிக்கப்படுகின்றன.

எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்படாமை காரணமாக, அதிகார காலம் நிறைவடைந்துள்ள ஒருசில மாகாண சபைகள், இரண்டு வருடத்திற்கும் மேலாக மக்கள் பிரதரிநிதிகளின்றி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
 
எவ்வாறிருப்பினும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற நிலையில், அது குறித்து சமூகத்தில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
 
இதனிடையே, எல்லை நிர்ணய அறிக்கையின்றி மாகாண சபைத் தேர்தலை நடத்துவதுவதற்கான தகைமை குறித்து, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியாணத்தை ஜனாதிபதி கோரியுள்ளார்.
 
ஜனாதிபதியின் குறித்த கோரிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, 5 நீதியரசர்கள் கொண்ட ஆயத்தை நியமிக்க நேற்றைய தினம் தீர்மானித்தார்.
 
இதற்கமைய, எதிர்வரும் 23ஆம் திகதி, 5 நீதியரசர் கொண்ட ஆயத்தினால் குறித்து விடயம் ஆராயப்படவுள்ளது.
 
இதேவேளை, தேர்தல் குறித்து எமது செய்திச் சேவையிடம் அண்மையில் கருத்து தெரிவித்திருந்த தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டுமாயின், ஆகக் குறைந்தது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 திகதியளவில் அந்த தேர்தலை நடத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.