ஐ.ம.சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் தொடர்பில் மனோ கணேசன் வெளியிட்ட செய்தி

Saturday, 08 August 2020 - 20:57

%E0%AE%90.%E0%AE%AE.%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
இம்முறை இடம்பெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை கைப்பற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்க்கு (AITK) தேசிய பட்டியலில் ஆசனம் ஒன்று வழங்கப்பட்டது.

இந்நிலையில் தேசியப் பட்டியலில் அக்கட்சி சார்பாக நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கப்படும் வேட்பாளரின் பெயரை தற்போது அக்கட்சி அறிவித்துள்ளது.

அதன்படி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செல்வராசா கஜேந்திரன், தேசிய பட்டியலில் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுஜன முன்னணி சார்பில் இம்முறை தேசிய பட்டியலில் தெரிவாகியுள்ள 17 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர்களின் அறிவிப்பு எதிர்வரும் தினங்களில் வெளியாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் ஊடாக பதிவொன்றை வெளியிட்டே அவர் குறித்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் அனைத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பிலான அறிவிப்பு எதிர்வரும் தினங்களில் வெளியாகவுள்ளதோடு இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பான அறிவிப்பும் எதிர்வரும் நாட்களில் வெளியாகவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, எமது மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஞானசார தேரரை நியமிப்பது தொடர்பில் அந்த கட்சி தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

எனினும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலில் உள்ளீர்க்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஞானசார தேரர் முன்வைத்திருந்த வேட்புமனு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேசிய பட்டியலில் பெயரிடப்படாதவர்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதவர்களை தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடுவதற்காக அந்த கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்துள்ளதாக கட்சியின் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றது.